Ramanathapuram: தமிழகத்தில் கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிஸ் ஆகிய இருவரும் காவல் துறையினரால் சித்திரவதைச் செய்யப்பட்டு உயிரிழந்தனர். இந்தப்படுகொலை நடந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், முதுகுளத்தூர் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர் மணிகண்டன் திடீர் மாரணம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மணிகண்டன் வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு இருக்கிறார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் திடீரென உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதே மணிகண்டனின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறிய உறவினர்கள் நேற்று திங்கள் கிழமை பரமக்குடி - முதுகுளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மறியலின் போது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு வலியுறுத்திய மணிகண்டனின் உறவினர்கள், உடலை வாங்காமல் ஊர் திரும்பினர். உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டதை அடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் விளக்கம்
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், போலீசார் மணிகண்டனிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்தினர் என்றும், அவரது தாயார் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்துவதற்கான காரணங்களைத் தெரிவித்தனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாணவர் என்பதால் வழக்கு பதிவு செய்யாமல், இருசக்கர வாகனத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மறுநாள் வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியதாகவும், மணிகண்டனின் மரணம் குடும்ப உறுப்பினர்கள் கூறுவது போல் போலீஸ் சித்திரவதை அல்லது உடல் ரீதியான தாக்குதல் காரணமாக இல்லை. முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை கூட அத்தகைய குறியீடுகளை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
காவல் ஆய்வாளர் பதில்
இந்நிலையில், கீழத்தூவல் காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது மணிகண்டன் உயிரிழப்பு சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய அவர், "கீழத்தூவல், மேலத்தூவல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், கீழத்தூவல் பகுதியில் உள்ள கண்மாயை உடைத்துவிட சிலர் முயன்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது தான் மணிகண்டன் அவரது நண்பர் சஞ்சீவுடன் அந்தப் பகுதியில் இருந்தார். பின்னர் அவர்கள் போலீசாரை பார்த்ததும் பைக்கை வேகமாக ஓட்டிச்சென்றனர். போலீசார் தொடர்ந்து துரத்தவே அவருடன் இருந்த சஞ்சீவ் பாதிவழியில் தப்பி சென்றுவிட்டார். ஏனென்றால், சஞ்சீவ் மேல் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
சிறிது தூரம் பைக்கில் சென்ற மணிகண்டன் மட்டும் அங்கிருந்த சகதியில் சிக்கி போலீசாரிடம் பிடிபட்டார். அவரை போலீசார் பிடித்தது போது மாலை 6 மணி இருக்கும். பிறகு, மணிகண்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அதன் பின்னர், நாங்கள் மணிகண்டனின் பெற்றோரை வரழைத்துதோம். அவர் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று கூறி பைக்கை மறுநாள் வந்து எடுத்துக்கொள்ள சொன்னோம். சில காவலர்கள் மணிகண்டனுக்கு அறிவுரை வழங்கினர். பிறகு அவர் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் நடந்த சிசிடிவி காட்சிகளை நேற்று வெளியிட்டோம். " என்று தெரிவித்தார்.
போலீஸ் சித்திரவதையே உயிரிழப்புக்கு காரணம்
ஆனால், தனது அண்ணன் பைக், உரம் மற்றும் பிறந்த நாள் கேக் வாங்க தான் முதுகுளத்தூர் சென்றதாகவும், வரும் வழியில் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர் என்றும் உயிரிழந்த மணிகண்டனின் சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் கூறுகிறார்.
இது குறித்து நம்மிடம் அவர் மேலும் பேசுகையில், "அண்ணன் பைக் வாங்க அம்மாவின் மோதிரம், ஜெயினை அவருக்கு கொடுத்தோம். முதுகுளத்தூர் தனியார் வங்கி ஒன்றில் அவரது பெயரில் கடந்த நவம்பர் 29ம் தேதி அடகு வைத்து 20 ஆயிரம் ரூபாய் சேர்த்தார். இந்த நிலையில் அண்ணன் பைக், உரம் மற்றும் பிறந்த நாள் கேக் வாங்க சனிக்கிழமை (டிசம்பர் 4ம் தேதி) முதுகுளத்தூர் சென்றார். திரும்பி வரும் வழியில் போலீசார் அவரை பிடித்தனர். பிறகு அவரை அடித்து இழுத்து கைது செய்தனர்.
மாலை 7:15 மணிக்கு போலீசார் எங்களுக்கு போன் செய்து உடனே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என அதிகாரமாய் சொன்னார்கள். பின்னர் அண்ணனை வீட்டிற்கு அழைத்து வந்தோம். பாதிவழியில் வரும் போது அண்ணன் வயிறு வலிக்கிறது என்றார். வீடு வந்ததும் தம்பிகளையெல்லாம் நல்லா பத்துக்கமா என்று கூறிவிட்டு தூங்க சென்றார். பின்னர், இரவு தீடிரென எழுந்து இரத்த வாந்தி எடுத்தார்." என்று கூறியுள்ளார்.
போலீசாரின் புதுயுத்தி
லாக்கப் மரணத்தில் இருந்து தப்பிக்க போலீசார் இப்படியொரு புதியமுறையை கையாளுகின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முருகன் நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும், மணிகண்டனுக்கு எந்தவிதமான கெட்டபழக்கமும் கிடையாது. அவர் காவல் மற்றும் இராணுவ பணிக்காக முயற்சி செய்து வந்தார் என்றும் கூறியுள்ளார்.
"மணிகண்டன் கஞ்சா அடித்து இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். உண்மையில், அவருக்கு இது போன்ற எந்தவித பழக்கமும் கிடையாது. அவர் நல்ல விளையாட்டு வீரர். காவல் துறை மற்றும் இராணுவத்தில் சேர வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.
ஒரு கோடி ரூபாய் இழப்பீடு என்பதை நாங்கள் வலியுறுத்தவில்லை. மணிகண்டனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதேபோல் அவரது உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இதை மதுரையில் உள்ள மருத்துவரோ அல்லது ராமநாதபுர மருத்துவரோ மாஜிஸ்திரேட் முன்னால் செய்திட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறுஉடற்கூராய்வுக்கு உத்தரவு
மணிகண்டனின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவிட கோரி அவரது தயார் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு அளித்திருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மணிகணிடனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்த விவகாரத்தில் அவரின் உடலை மறுஉடற்கூராய்வு செய்திட தற்போது மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், உண்மையில் அவர் போலீஸ் சித்திரவதையில் தான் உயிரிழந்தாரா? என்பது விரைவில் தெரிய வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.