Advertisment

என்.எல்.சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவிக்கை வெளியிட்ட தமிழக அரசு: அன்புமணி காட்டம்

என்.எல்.சிக்காக தமிழக அரசால் கையகப்படுத்தித் தரப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையும் நிலங்கள் ஆகும்

author-image
WebDesk
New Update
NLC Neyveli workers protest letter to Cuddalor police Tamil News

NLC India Limited

கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு எதிராக உழவர்களும், மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், என்.எல்.சி 1, 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட அம்மேரி, குறிஞ்சிப்பாடி வட்டம் தென்குத்து,  தொப்பிலிக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை நாளிதழ்கள் வாயிலாக தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டிருக்கிறது. கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே பறித்துக் கொண்டிருக்கும்  சூழலில், இப்போது மீதமுள்ள நிலங்களையும் பறிக்க என்.எல்.சி துடிப்பதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைபோவதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதைப் போல அமைந்திருக்கிறது. தமிழக அரசிடம் இருந்து இப்படி ஒரு துரோகச் செயலை தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை; மன்னிக்கவும் மாட்டார்கள்.

1956-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை 37,256 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்கு  தமிழ்நாடு அரசு பறித்துக் கொடுத்திருக்கிறது. இந்த நிலங்கள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமானவை. பறிக்கப்பட்ட நிலங்களை வைத்திருந்த 25 ஆயிரம் குடும்பங்களும் சுயமரியாதையுடனும், கவுரவத்துடனும், பொருளாதார தன்னிறைவுடனும் வாழ்ந்து வந்தனர். நிலங்கள் பறிக்கப்பட்ட பிறகு அவர்கள் நாடோடிகளாகவும், உள்நாட்டு அகதிகளாகவும் மாற்றப்பட்டு விட்டனர். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து விட்டு, கூனிக்குறுகி கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; அவர்கள் வாழ்வதற்கு மாற்று இடங்கள் வழங்கப்படவில்லை; நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் நிலம் கொடுத்தவர்களில் ஒருவருக்குக் கூட வேலை வழங்கப்படவில்லை. மாறாக,  என்.எல்.சி நிறுவனம் கோடி, கோடியாக லாபம் ஈட்டி வெளிமாநிலங்களில் முதலீடு செய்து வருகிறது.

என்.எல்.சிக்காக இப்போது பறிக்கப்படவிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களுக்கும் இதே நிலை  தான் ஏற்படப்போகிறது. இதற்கு தமிழக அரசு துணை போகலாமா? என்பது தான் எனது வினாவாகும். ஒரு மாநிலத்தின் அரசு என்பது வல்லூறுகளிடமிருந்து குஞ்சுகளைக் காக்கும் கோழிகளைப் போல செயல்பட வேண்டும். வல்லூறுகளிடம் மோதி வெல்லும் வலிமை கோழிகளுக்கு கிடையாது. ஆனாலும், தமது பிள்ளைகளுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன், கோழிகள் வீறு கொண்டு எழுந்து வல்லூறுகளை  எதிர்த்து போராடும். அதற்குப் பெயர் தான் பொறுப்புடைமை. அந்தப் பொறுப்புடமை தமிழக அரசுக்கு இருக்க வேண்டும். என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தித் தரும்படி மத்திய அரசே கடும் நெருக்கடி  கொடுத்தாலும், அதற்கு பணியாமல் உழவர்களையும், அவர்களின் வேளாண் விளைநிலங்களையும்  பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், தமிழக அரசோ, அதன் கடமைகளையும்,  பொறுப்புகளையும் மறந்து விட்டு என்.எல்.சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.

என்.எல்.சி நிறுவனத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை; என்.எல்.சியால் தமிழகத்திற்கும், குறிப்பாக கடலூர் மாவட்டத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு நாள் கூட நீடிப்பதற்கு தகுதியற்ற நிறுவனம் எனும் நிலையில்,  அதை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தான் தமிழக அரசு ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக,  என்.எல்.சி கேட்டவுடன் தனது அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, உழவர்களின் நிலங்களைப் பறித்து தருவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு  தெரிவித்தது.  சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காக சுமார் 7000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தியது. ஆனால், இப்போது என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக அரசே நிலங்களை கையகப்படுத்தித் தருவதை திமுகவின் இரட்டை வேடமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

என்.எல்.சிக்காக தமிழக அரசால் கையகப்படுத்தித் தரப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம்  விளையும் நிலங்கள் ஆகும். பொன்விளையும் பூமியை கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மண்ணையும்,  மக்களையும் காப்பதற்காக நடத்தி வரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடரும். ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுத் தராது.

தமிழ்நாடு அரசுக்கு  மீண்டும், மீண்டும் நான் வழங்கும் அறிவுரை என்னவென்றால், மக்களின் பக்கங்கள் நில்லுங்கள்... மண்ணை நாசமாக்கும் பெரு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் என்பது தான். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறித்தும் கடலூர் மாவட்ட மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதாலேயே, அவர்கள் அனைத்து நிலப்பறிப்புகளை பொறுத்துக் கொள்வர் என்று  என்று நினைக்க வேண்டும். அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லை கடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். இதை தமிழக அரசு உணர வேண்டும். நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment