டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கர்நாடக மாநிலத்தின் குடகு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை பதிவெண் கொண்ட வாகனங்களில் தமிழக போலீசார் இன்று திடீரென அந்த விடுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் காவல் உடையில் இல்லாமல், சாதாரண உடையில் இருந்தனர். அதன் பின்னரே, அவர்கள் காவல்துறையினர் என்பது தெரியவந்தது. இருபத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் தற்போது அந்த விடுதிக்குள் சென்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விருப்பத்துடன் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது கட்டாயத்தின் பேரில் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனரா? என்று அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த விடுதிக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் காவல் உடையில் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். உள்ளே எதற்காக மேலதிகாரிகள் விசாரணை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரியாது. அவர்கள் ஏன் வந்தார்கள் என்பது கூட எங்களுக்கு தெரியாது. அவர்கள் வெளியே வந்தால் தான், உண்மை நிலவரம் தெரியவரும்" என்றார்.