Advertisment

தமிழக அரசியல் நெருக்கடி live updates : செப்டம்பர் 12-ல் அதிமுக செயற்குழு - பொதுக்குழு

தமிழக அரசியலில் நெருக்கடியான சூழலில் ஆகஸ்ட் 28-ம் தேதி (இன்று) அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலா மீதான நடவடிக்கை பற்றிய விவாதம்தான் எதிர்பார்ப்பு!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசியல் நெருக்கடி live updates : செப்டம்பர் 12-ல் அதிமுக செயற்குழு - பொதுக்குழு

தமிழக அரசியலில் நெருக்கடியான சூழல் தொடர்கிறது. ஆகஸ்ட் 28-ம் தேதி (இன்று) அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து, ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கையை தீர்மானிக்கும் சட்டமன்ற உரிமைக் குழு விசாரணையும் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisment

தமிழக அரசியல், அதிமுக அணிகளின் மோதல் காரணமாக நெருக்கடியான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைந்தபிறகு, சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதற்காக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இதன் முதல் கட்டமாக அணிகள் இணைப்பு நடந்த அன்றே, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது, சசிகலாவை நீக்குவது, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 28-ம் தேதி (இன்று) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் முடிவுகள் தமிழகத்தை தாண்டியும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசியலை நெருக்கடிக்கு தள்ளியிருக்கும் அதிமுக நிலவரம் தொடர்பான live updates இங்கே!

மாலை 6.00 : செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறும் எனவும், அவைத்தலைவர் மதுசூதனன் இதற்கு தலைமை தாங்குவார் என்றும் எடப்பாடி - ஓ.பி.எஸ். தரப்பு அறிவித்துள்ளது. வழக்கமாக ஜெயலலிதா தேர்வு செய்கிற அதே வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மகாலில் இந்தக் கூட்டங்கள் நடக்க இருப்பதாக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாலை 5.30 : சட்டமன்ற உரிமைக் குழு கூட்டம் முடிந்தது. எனினும் ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை பற்றி உடனடியாக அறிவிப்பு இல்லை.

மாலை 5.00: டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களான பூந்தமல்லி ஏழுமலை, நிலக்கோட்டை தங்கதுரை, ஜக்கையன் ஆகிய மூவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகும், உரிமைக்குழுவில் இருந்து அவர் மாற்றப்படவில்லை. எனவே ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், கீதா உள்பட ஆளும்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் கலந்துகொண்டனர்.

மாலை 4.50 : காங்கிரஸ் கொறடாவும், உரிமைக்குழு உறுப்பினருமான விஜயதரணி வருகை தந்தார். அதிமுக உறுப்பினர்களும் வந்துவிட,  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

மாலை 4.45 : தமிழக சட்டமன்ற உரிமைக்குழு கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன், கே.ஆர்.பெரியகருப்பன், சுந்தர், கே.எஸ்.ரவிசந்திரன், எஸ்.ரகுபதி ஆகியோர் தலைமை செயலகம் வந்தனர். குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டு வந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீதும் புகார் இருப்பதால், இந்தக் குழுவின் உறுப்பினரான அவரை கூட்டத்திற்கு அழைக்கவில்லை.

மாலை 3.30 : அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ரமணா, புத்திசந்திரன் மற்றும் சைதை துரைசாமி, நீலகிரி மா.செ அர்ஜுன் எம்.பி, மாணவரணி செயலாளர் எஸ்.ஆர் விஜயகுமார் எம்.பி  உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக டிவிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மாலை 3.00 : அதிமுக (அம்மா) இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் டிடிவி.தினகரன்.

பிற்பகல் 2.30 : இன்று மாலை 3 மணிக்கு மேல் தமிழக சட்டமன்ற உரிமைக்குழு கூடவிருக்கும் நிலையில், கோட்டையில் சபாநாயகர் தனபாலை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். கடந்த ஜூலை 19-ம் தேதி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் சட்டமன்றத்திற்கு குட்கா எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் பிரச்னை பற்றி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு இன்று விசாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 2.15 : பொதுச்செயலாளர் (ஜெயலலிதா) இல்லாத நிலையில் அவரால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மூலமாக கட்சியை வழிநடத்தலாம் என்கிற விதியை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத்தில் புதிய அபிடவிட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்காக எடப்பாடி - ஓ.பி.எஸ். தரப்பு முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு செல்கிறார்கள். ஏற்கனவே சமர்ப்பித்த அபிடவிட்களை வாபஸ் பெறவும் முடிவு செய்துள்ளனர்.

பிற்பகல் 2.00 : விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நீக்கம் செய்யப்பட்டு, சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக டிடிவி.தினகரன் அறிவித்தார்.

பகல் 1.00 : கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறினார். டிடிவி.யை கட்சியை விட்டு ஒதுக்குவது, நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி ஆகியவற்றை கட்சி ஏற்பது, செயற்குழு மற்றும் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது ஆகியவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். '40 எம்.எல்.ஏ.க்கள் வரை கூட்டத்தில் பங்கேற்காதது’ குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘117 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டதாக’ ஜெயகுமார் கூறினார்.

aiadmk, aiadmk merger, aiadmk office bearers meeting, cm edappadi palaniswamy, o.panneerselvam, ttv.dhinakaran அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்...

பகல் 12.30 : கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் வேலுமணி நீக்கப்பட்டதாக டிடிவி.தினகரன் அறிவித்தார்.

பகல் 12.15 : சசிகலா பற்றி கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை. பொதுச்செயலாளரை நீக்கினால் கட்சியே இல்லை என கூட்டத்தில் பங்கேற்ற ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

நண்பகல் 12.00 : டிடிவி.தினகரன் இல்லத்தில் நிருபர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ‘எடப்பாடி தரப்பு நிறைவேற்றிய 4 தீர்மானங்களும் செல்லாது. தனியார் சொத்தான நமது எம்.ஜி.ஆர், ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை எப்படி இவர்கள் கைப்பற்றுவார்கள்? இதிலிருந்தே இவர்களை 420 (மோசடிப் பேர்வழி) என எங்கள் துணைப் பொதுச்செயலாளர் சொன்னது நிரூபணம் ஆகியிருக்கிறது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனைப்படியே இந்த ஆட்சியை நடத்துகிறார்கள்’ என ஆவேசமாக கூறினார்.

பகல் 11.50: கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நிருபர்களிடம் பேசுவார்கள் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியதாக முதலில் வெளியான தகவல்கள் தவறானவை என்பது அப்போது தெரியவந்தது.

பகல் 11.40 :

மொத்தம் 4 தீர்மானங்கள்

1. டிடிவி.தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைப்பது

2. தினகரனால் செய்யப்பட்ட நியமனங்கள் செல்லாது.

3.அதிமுக.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை அதிமுக கட்சியே நடத்துவது

4.விரைவில் கட்சி செயற்குழு, பொதுக்குழுவை நடத்துவது

 பகல் 11.35 : சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை அதிமுக.வில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும், அவர்கள் மூலமாக கட்சியில் செய்யப்பட்ட நியமனங்கள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அடிப்படையில் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்ததும், செங்கோட்டையனை அவைத்தலைவராக நியமித்ததும் செல்லாதது ஆகும்.

அதிமுக.வின் அதிகாரபூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை கட்சியே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பகல் 11.30 : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளர்கள் அதிகாரபூர்வ தகவல்களுக்காக காத்திருந்தனர்.

காலை 10.30 மணி : அதிமுக தலைமை அலுவலகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் டிடிவி.தினகரன் மூத்த வழக்கறிஞர்கள் சிலரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

காலை 10.20 : பாண்டிச்சேரியில் பேட்டியளித்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன், ‘எம்.எல்.ஏ.க்களான எங்களுக்கு அழைப்பு இல்லாமல் நடக்கும் அந்தக் கூட்டம் எப்படி அதிகாரபூர்வமான கூட்டமாக இருக்கும்? டெல்லி பாஜக.விடம் இவர்கள் அதிமுகவை அடிமைப்படுத்துகிறார்கள். முக்கிய அமைச்சர்களே அடிக்கடி குருமூர்த்தியை சென்று சந்தித்து ஆலோசனை பெறவேண்டிய அவசியம் என்ன?’ என கேள்வி எழுப்பினார்.

காலை 10.15. எடப்பாடி அணியின் முக்கிய பிரமுகரும், மின் துறை அமைச்சருமான தங்கமணியை நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டிடிவி.தினகரன் அறிவித்தார்.

காலை 10.10 : டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக கூறப்பட்ட தோப்பு வெங்கடாச்சலம், திருப்பரங்குன்றம் போஸ் ஆகியோர் வருகை தந்தது, எடப்பாடி தரப்புக்கு இன்ப அதிர்ச்சி! அதே சமயம் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படும் 115 எம்.எல்.ஏ.க்களில் சுமார் 30 பேர் வரை வரவில்லை என கூறப்பட்டது. ஆனால் இதை அதிகாரபூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை.

காலை 10.00 : திடீர் சமரச முயற்சியாக அதிமுக வழிகாட்டும் குழுவில் டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு இடம் கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் டிடிவி அணியை சேர்ந்த வெற்றிவேல், ‘வழிகாட்டும் குழுவில் 11 பேரையும் எங்கள் அணியை சேர்ந்தவர்களை போடுவதாக இருந்தாலும் அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டமு, அதில் எடுக்கப்படும் முடிவுகளும் செல்லுபடியாகாது’ என்றார்.

காலை 9.50 : ஆலோசனைக் கூட்ட மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, செம்மலை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன் ஆகியோர் அமர்ந்து விவாதித்தனர்.

tamilnadu political crisis, live updates, aiadmk, aiadmk factions, aiadmk head office அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுசூதனன் பேசிய காட்சி.

காலை 9.45  : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் வருகையை தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

காலை 9.30 : ஓ.பி.எஸ். அணியின் வி.ஐ.பி.க்களான கே.பி.முனுசாமி, செம்மலை உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

காலை 9 மணி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிகளின் எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணியில் இருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தனர்.

V K Sasikala Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment