தமிழக அரசியல் நெருக்கடி live updates: ஆளுனர் வருகை திருப்பத்தை உருவாக்குமா?

தமிழக அரசியல் நெருக்கடியான சூழலில் ஆளுனர் வித்யாசாகர்ராவின் வருகை, புதிய திருப்பத்தை உருவாக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழக அரசியலை நெருக்கடியான சூழலுக்கு, அதிமுக அணிகளின் மோதல் தள்ளியிருக்கிறது. இன்று ஆளுனர் வித்யாசாகர்ராவின் வருகை, புதிய திருப்பத்தை உருவாக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக ஸ்திரமற்ற நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டு வருகிறது. அதிமுக அணிகளின் மோதலே இதற்கு காரணம். சசிகலாவையும், டிடிவி.தினகரனையும் முழுமையாக கட்சியை விட்டு அகற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மும்முரமாக இருக்கிறார்கள்.

ஆனால் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், ‘முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்’ என கவர்னர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் கொடுத்தனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்பார்த்து, கடந்த 5 நாட்களாக பாண்டிச்சேரியில் முகாமிட்டுள்ளனர். இந்தச் சூழலில் ஆகஸ்ட் 25-ம் தேதி அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் புதிதாக டிடிவி. அணிக்கு தாவியிருக்கிறார்கள். இவர்களும் பாண்டிச்சேரி முகாமில் கலந்துவிட்டனர்.

இவர்களில் 19 பேர் மீது, ‘கட்சித் தாவல் தடை சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?’ என கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து எடப்பாடி பழனிசாமி தோல்வியை தழுவுவார்களா? அல்லது, டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை இழப்பார்களா? என சாஸ்பென்ஸாக காட்சிகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தக் காட்சிகளின் இன்றைய (ஆக.26) live updates இங்கே..

மாலை 5.00 : தமிழக அரசியல் வட்டாரம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கவர்னர் வித்யாசாகர்ராவ் சென்னை வந்தார். அவரை சந்திக்கும் வி.ஐ.பி.க்கள், அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து அரசியலில் அடுத்தகட்ட காட்சிகள் இருக்கும்.

மாலை 4.15 : அதிமுக அணிகளின் உள்குத்தால் கட்சி கலகலத்து வரும் வேளையில் முன்னாள் அமைச்சரும், தென் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பிரமுகருமான நயினார் நாகேந்திரன் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்தார். அவருடன் வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோரும் பா.ஜ.க.வில் ஐக்கியமானார்கள். அதிமுக – பாஜக இடையே இணக்கம் நிலவி வருவதாக பேசப்படும் நிலையில், அதிமுகவில் இருந்தே முக்கிய பிரமுகர்களை பா.ஜ.க.வில் சேர்ப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாலை 4.00 : திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், “கவர்னரின் நடவடிக்கையை எதிர்பார்த்தே எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருப்பதாக’ கூறினார். ‘நீங்கள் கவர்னரை சந்திப்பீர்களா?’ எனக் கேட்டபோது, ‘அந்தத் திட்டம் இல்லை’ என கூறினாற்.

மாலை 3.40 : நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் தலைமையில் கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்களை சந்தித்து, ‘டிடிவி.தினகரன் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியிலும் கட்சியிலும் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இந்தக் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? என்றே தெரியாத டிடிவி.தினகரன் தினம்தோறும் அம்மாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்கி வருகிறார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பேட்டியில் கூறியதுபோல, நானே ராஜா நானே மந்திரி’ என டிடிவி.தினகரன் செயல்படுகிறார். அவர் ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்கவேண்டும்.

சசிகலாவை முன்னிறுத்தி டிடிவி.தினகரனே மக்கள் மத்தியில் ஒரு சர்வே எடுக்கட்டும். அதன்பிறகு சசிகலாவை கட்சிப் பதவியில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம்’ என கூறினர்.

பிற்பகல் 2.00 : அதிமுக.வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கோகுல  இந்திராவை நீக்குவதாக டிடிவி.தினகரன் அறிவித்தார். சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். அதேபோல அதிமுக இளம்பெண், இளைஞர் பாசறை மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து குமார் எம்.பி. விடுவிக்கப்படுவதாக டிடிவி.தினகரன் கூறியிருக்கிறார். கட்சியின் புதிய அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பகல் 1.05 : டிடிவி.தினகரன் தனக்கு எதிராக இயங்கி வரும் கட்சி நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கி வருகிறார். அந்த அடிப்படையில் இன்று, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., அரியலூர் மாவட்டச் செயலாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் ஆகியோரின் கட்சிப் பதவிகளை பறித்துவிட்டு, முறையே ஞானமணி, உமாதேவன், முத்தையன் ஆகியோரை அந்தப் பொறுப்புகளில் நியமனம் செய்தார்.

பகல் 1.00 : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ‘அம்மாவின் சீரிய திட்டங்களை நிறைவேற்ற இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பாண்டிச்சேரியில் இருக்கும் 19 எம்.எல்.ஏ.க்களின் விருப்பமும் இதுதான். எனவே ஆட்சிக்கு விரோதமாக அவர்கள் போகமாட்டார்கள்’ என்றார்.

பகல் 12.15 மணி : நெல்லையில் நிருபர்களிடம் பேசிய அதிமுக மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜிலா சத்யானந்த், ‘எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் உத்தரவுப்படி நாங்கள் நடப்போம்’ என்று கூறினார்.

நண்பகல் 12.00 : கடந்த 5 நாட்களாக சென்னை பெசன்ட் நகர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த டிடிவி.தினகரன், திருப்பூரில் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இன்று வெளியே வந்தார். அவரை நிருபர்கள் மொய்த்தபோது, ‘தொண்டை வலி காரணமாக பேசக்கூடாது என டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள்’ என கூறினார் டிடிவி.தினகரன். சபாநாயகரின் நோட்டீஸ் பற்றி கேட்டபோது, ‘அதில் உரிய முடிவை எடுப்போம். கடவுளை தவிர எங்களை யாரும் மிரட்ட முடியாது. 19 எம்.எல்.ஏ.க்களும் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள். சசிகலாவை நீக்குவோம் என கூறியவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’ என கூறினார் டிடிவி.

பகல் 11.30 : பாண்டிச்சேரியில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் செய்தியாளர்கள், ‘ஆப் தி ரெக்கார்டா சொல்லுங்க. திங்கட்கிழமை எடப்பாடி தரப்பு கூட்டத்துக்கு அனைத்து நிர்வாகிகளும் போவாங்களா? சசிகலாவை நீக்கினால் என்ன செய்வீங்க?’ என கேட்டனர். அதற்கு அவர்கள், ‘பொதுச்செயலாளரை நீக்க தொண்டர்கள் சம்மதிக்க மாட்டாங்க. அங்க அடிதடிதான் நடக்கும்’ என வெளிப்படையாக கூறினார்கள். உடனே இதையும், ‘சசிகலாவை நீக்கினால் வன்முறை வெடிக்கும்’ என செய்தியாக வெளியிட்டது கொடுமை.

காலை 11.15 மணி : பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், ‘கவர்னரை சந்திக்க எங்களுக்கு ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவோம். கவர்னரை சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால், ஜனாதிபதியிடம் முறையிடுவோம்’ என்று கூறினார்.

காலை 10.15 மணி : தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், ‘இப்போதைய அரசுக்கு இன்னும் அவகாசம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஊழலற்ற அரசை அமைக்க வேண்டும்’ என திருநாவுக்கரசருக்கு நேர் எதிர் கருத்தை சொன்னார்.

காலை 10.00 மணி : சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அதிமுக.வில் எம்.எல்.ஏ.க்கள் மூன்று அணிகளாக இருக்கிறார்கள். 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் மீது நம்பிக்கையின்மை தெரிவித்து கடிதமும் கொடுத்திருக்கிறார்கள். எனவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்தார் அரசர்.

காலை 9.45 மணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோரின் இல்லங்களில் அவரவர் அணி இரண்டாம்கட்ட தலைவர்களின் கூட்டம் காணப்பட்டது. ஆளுனர் வித்யாசாகர்ராவ் இன்று (ஆகஸ்ட் 26) சென்னைக்கு வந்தால், அவரை சந்திப்பது பற்றிய ஆலோசனைகள் நடந்ததாக கூறப்பட்டது. கவர்னரிடம் மனு கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால், அதில் முடிவு கிடைக்கும் வரை பொறுத்திருக்கும்படி கவர்னரிடம் எடப்பாடி தரப்பில் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கவர்னரின் தமிழக வருகை, இந்த நெருக்கடியான சூழலில் முக்கிய திருப்பத்தை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9.30 மணி : நெருக்கடியான சூழலிலும் சிரித்தபடி மீடியாவை எதிர்கொள்கிறவரான டிடிவி.தினகரன், கடந்த 5 நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இன்றும் அவரை சந்திக்க மீடியா எடுத்த முயற்சி பலிக்கவில்லை. உடல் நிலையை காரணம் காட்டி அவர் சந்திப்பதை தவிர்த்தாலும், புதிதாக வந்து சேரும் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை சந்திப்பதில் பிஸியாகவே இருக்கிறார்.

காலை 9.15 மணி : சென்னை பெசன்ட் நகரில் டிடிவி.தினகரன் இல்லம் அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் டிடிவி.தினகரனின் படங்களை முன் தினம் இரவு யாரோ கிழித்திருந்தார்கள். இது காலையில் அங்கு வந்த டிடிவி ஆதரவாளர்களை டென்ஷனாக்கியது. ஆனால் இதை பிரச்னை ஆக்கவேண்டாம் என டிடிவி கூறிவிட்டதாக பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காலை 9 மணி : பாண்டிச்சேரியில் முகாமிட்டிருக்கும் டிடிவி.தினகரன் அணியின் பெண் எம்.எல்.ஏ.க்களான ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகியோர் இதுவரை மீடியாவிடம் பேசவில்லை. எனவே, ‘அவர்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருப்பதாக’ பாண்டிச்சேரியில் உள்ள ஓ.பி.எஸ். அணியினர் தகவல்களை கிளப்பினர். டிடிவி. அணியினரோ, ‘அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்துடன் தங்கியிருப்பதாக’ விளக்கம் கொடுத்து சமாளித்தனர்.

காலை 8 மணி : 5-வது நாளாக பாண்டிச்சேரியில் முகாமிட்டிருக்கும் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள், காலையில் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு வந்தனர். ஓரிருவர் மீடியாவை சந்தித்தனர். பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை நிருபர்களிடம் பேசுகையில், ‘எடப்பாடி நன்றாகத்தான் ஆட்சி நடத்துகிறார். அவரை மாற்ற வேண்டும் என்பதுகூட எங்களுக்கு முழு விருப்பம் இல்லை. ஆனால் கட்சியையும் பார்க்க வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம். மக்களின் கருத்துப்படிதான் நாங்கள் இங்கே இருக்கிறோம்’ என அப்படியே கவர்னரிடம் கொடுத்த மனுவுக்கு உல்டாவாக பேட்டி கொடுத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close