தமிழக அரசியல் நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் டிடிவி.தினகரனின் அடுத்த மூவ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான live updates இங்கு தரப்படுகிறது.
தமிழக அரசியல், நெருக்கடியான ஒரு சூழலை நோக்கி பயணிக்கிறது. டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெற்றதன் மூலமாக இந்த நெருக்கடி அதிகரித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அரசியல் பார்வையாளர்களின் கவனம் முழுக்க சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரன் வீட்டிலும், அவரது அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாண்டிச்சேரி சொகுசு ஹோட்டலிலும் பதிந்திருக்கின்றன.
இது தொடர்பான live updates :
மாலை 5.00 : உச்சநீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மாலை 4.30 : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிக்கையில் சொல்லியிருந்தார்.
மாலை 3.30 : மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் கூடிய அந்தக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், ‘டிடிவி.தினகரன் பிரிவு, கொள்கை ரீதியிலான பிரிவு அல்ல’ என விமர்சனம் செய்தது. ‘தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதால், பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாலை 3.00 : தனபாலை முதல்வர் ஆக்க திருமாவளவன் வரவேற்பு தெரிவித்து வெளியிட்ட கருத்துக்கு, கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டார். திமுக அணியில் இடம் பெற்றிருப்பவரான இவர், ‘இதே தனபால் சட்டமன்றத்தில் சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாக புகார் இருக்கிறது. அவரை ஜாதி அடிப்படையில் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்துவதை ஏற்க முடியாது. ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தீர்வு’ என அறிக்கை விட்டார் ஈஸ்வரன்.
பிற்பகல் 2.00 : தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான தனபாலை முதல்வர் ஆக்கும் திவாகரன் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார்.
பகல் 1.30 மணி : நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷால், தனது தங்கை திருமண விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க, டிடிவி.யின் இல்லத்திற்கு வந்தார். ஆனால் அவர் டிடிவி.க்கு ஆதரவு கொடுக்க வந்துவிட்டதாகவே சிலர் பரபரப்பு கிளப்பினார்கள்.
பகல் 12.40 : டிடிவி. அணி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வெற்றிவேல், பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரனின் இல்லத்திற்கு வந்தார். அங்கு தினகரனுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். சற்று நேரத்தில் நாஞ்சில் சம்பத்தும் அங்கு வந்தார்.
பகல் 12.30 : எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடும்படி ஆளுனர் வித்யாசாகர்ராவுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் அனுப்பினார்.
பகல் 11.45 : டிடிவி. அணி தங்கியிருக்கும் ரிசார்ட்டை முற்றுகையிட வந்த ஓ.பி.எஸ். அணி ஓம்சக்தி சேகர் கூறுகையில், “பாண்டிச்சேரி நகர் பகுதியில் அத்தனை ஹோட்டல்களும் டிடிவி. அணிக்கு அறை கொடுக்க மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் டிடிவி.தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் ஹோட்டலில் அறைகளை பெற்றிருக்கிறார்’ என குற்றம் சாட்டினர். மத்திய அரசை இந்த விஷயத்தில் உசுப்பி விடுவதில் தீவிரமாக இருந்தார்கள் அவர்கள்.
பகல் 11.30 : பாண்டிச்சேரியில் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்களை பாதி வழியில் தடுத்து நிறுத்திய போலீஸாருடன் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
‘துரோகிகளே பாண்டிச்சேரியை விட்டு வெளியேறுங்கள்’ என அவர்கள் டிடிவி. அணிக்கு எதிராக கோஷமிட்டனர். டிடிவி. உருவப்படங்களை தீயிட்டும் கொளுத்தினர்.
காலை 11.15 : சசிகலா நீக்கப்படுவார் என கருத்து தெரிவித்த வைத்திலிங்கம் எம்.பி.யை முன்தினம் கட்சியை விட்டு டிடிவி.தினகரன் நீக்கி அறிவித்ததுபோல, இரண்டாவது நாளாக அதே மாதிரியான நடவடிக்கையை அறிவித்தார். முக்கியமாக ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயகுமாரை நீக்குவதாக அறிவித்தார் டிடிவி.தினகரன். அந்த பொறுப்புக்கு கென்னடி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார்.
காலை 11 மணி : பாண்டிச்சேரியில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டுக்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் வர இருக்கும் தகவல் டிடிவி.தினகரனுக்கு கிடைத்தது. உடனே கிளம்பி பாண்டிச்சேரிக்கு செல்லலாமா? என அவரது ஆதரவாளர்களிடன் ஆலோசனை கேட்டபடி இருந்தார் டிடிவி.
காலை 10.35: கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், ‘எடப்பாடி-ஓ.பி.எஸ். இணைந்து மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. சட்டமன்ற சபாநாயகர் தனபாலை அனைவரும் ஒருமித்த கருத்துடன் முதல்வர் ஆக்குவோம்’ என்றார்.
காலை 10.30 : இதற்கிடையே சென்னை பெசன்ட் நகரில் டிடிவி.தினகரனின் வீட்டிலும் தொண்டர்கள் கூட்டமும், மீடியா கூட்டமும் முற்றுகையிட்டது. 23-ம் தேதி இந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக பேட்டி கொடுப்பதாக டிடிவி.தினகரன் ஏற்கனவே டிவிட்டரில் தெரிவித்திருந்ததால், அந்த எதிர்பார்ப்பும் இருந்தது.
காலை 10.15 : சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த மக்களவை சபாநாயகர், ‘அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாக கூற முடியாது. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தால்தான் பிளவு என பொருள்படும்’ என்றார்.
காலை 10.00: டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டுக்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் முற்றுகையிட வருவதாக தகவல் கிடைத்து, போலீஸ் உஷாரானது. ரிசார்ட்டில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு போடப்பட்டனர்.
காலை 9.30 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய 19 எம்.எல்.ஏ,க்களில் 18 பேர் மட்டுமே புதுவை வந்திருக்கிறார்கள். பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வரவில்லை. டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த பிப்ரவரியில் கூவத்தூரிலும் முகாமிடவில்லை. உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு விதிவிலக்கு என்றார்கள். கடற்கரையை ஒட்டிய இந்த ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காலையில் கடற்கரையில் நடை பயிற்சி சென்று திரும்பியிருக்கிறார்கள்.
காலை 9 மணி : பாண்டிச்சேரியில் அரியாங்குப்பம், சின்னவீரம்பட்டினத்தில் உள்ள பிரபலமான ‘வின்ட் பிளவர் ரிசார்ட்’டில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். காலையிலேயே மீடியாவின் முற்றுகையில் அந்த ‘ரிசார்ட்’ தத்தளித்தது. பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டிகள் குவிக்கப்பட்டிருந்தனர். மீடியா உள்பட வெளி நபர்கள் யாரும் உள்ளே விடப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.