நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெருமைகளை நினைவு கூறுவது என்பது தமிழகத்திற்கே பெருமை என துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார். நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பேசும்போது: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன் திரைப்படத்துறையில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார் என்பதனை அனைவரும் அறிவோம். அவருடைய அருமை, பெருமைகளை இந்த நேரத்தில் நினைவு கூறுவது, தமிழக மக்களுக்கே பெருமை என்ற நிலையில், இந்த மணிமண்டப திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தில், பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை கண்ட பெரியார், அதுவரை கணேசன் என்று அழைக்கப்பட்டவரை சிவாஜி கணேசன் என்று பெருமைப்படுத்தி பாராட்டினார். அன்றில் இருந்து அந்தபெயரே அவருக்கு நிலைத்திருக்க காரணமாக அமைந்தது.
பேரரிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு, அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வழிவகை செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ராஜா சாண்டோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசன் போன்ற அரும்பெரும் கலைஞர்களின் பெயர்களில் தமிழக அரசு விருதுகளை வழங்கி வந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருதும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
தமிழ் திரைப்படத்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்திடும் வகையில், தமிழ் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உற்சாகமும், உத்வேகமும் பெற்றிடும் வகையிலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைத்ததில் நான் பெருமை கொள்கிறேன் என்று பேசினார்.