Advertisment

கனமழை : விடுமுறையாலும்கூட காப்பாற்ற முடியாத இளம் தளிர்கள்

ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால், அந்த மின்துறை அதிகாரி கூற்றுப்படி, அங்கு வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். அச்சிறுமிகளும் இன்று சுவாசித்துக் கொண்டிருப்பர்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கனமழை : விடுமுறையாலும்கூட காப்பாற்ற முடியாத இளம் தளிர்கள்

மழை பெய்யாதா, ஆறுகள் நிரம்பாதா, விவசாயிகளின் மரணம் தடுக்கப்படாதா என வருடத்தின் முற்பகுதியில் வெதும்புவதும், பிற்பகுதியில் கொட்டும் மழையால், மழைநீர் ஓட வழியில்லாமல், ஊருக்குள் புகுந்து தேங்கி நின்று மக்களை ஓட ஓட விரட்டுவதும் என தமிழகம் சந்தித்து வரும் கொடுமைக்கு அளவில்லாமல் போய்விட்டது.

Advertisment

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையில் இருந்து, நாம் பாடம் கற்றுக் கொண்டோமா என்றால், கத்துக்கிட்டோம்... ஆனால், கத்துக்கல.... என்பது போலவே இருக்கிறது ஆட்சியாளர்களின் செயல்பாடுகள்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்து சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு அறிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இன்று இந்தளவிற்கு சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதற்கு யார் காரணம்?

ஆனால், இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், '2015-ல் பெய்த கனமழையால் கிடைத்த அனுபவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இப்போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் உள்ளது' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அப்படியெனில், சாலைகளில் இன்னமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் விஷயமே முதல்வருக்கு தெரியவில்லையா?

நிலைமை இப்படியிருக்க, மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த நவ.,1-ஆம் தேதி கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகரில், 2-வது வகுப்பு படித்து வந்த பாவனா(வயது 7), 4-ஆம் வகுப்பு படித்து வந்த யுவஸ்ரீ(9) ஆகிய இரு சிறுமிகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு மின்சார பெட்டியில் இருந்து மற்றொரு மின்சார பெட்டிக்கு தரை வழியாக செல்லும் மின்சார வயர், மண்ணில் புதைக்கப்படாமல் சேதம் அடைந்து இருந்தது.

தெருவில் தேங்கி நின்ற மழைநீரில் அந்த மின்வயரும் மூழ்கி கிடந்ததால் அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த இரு சிறுமிகளும் கடைக்கு செல்ல முற்பட்டு அந்த தண்ணீரில் இறங்கிய போது, அவர்களை மின்சாரம் தாக்கியது. இருவரும் அலறியடித்து படி சரிந்து விழுந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிகள், சிகிச்சை பலனின்றி உயிரை விட்டனர்.

publive-image அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான சிறுமிகள்...

இதன்பின் 3 அதிகாரிகள் உட்பட மூன்று 8 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்துறை உத்தரவிட்டது. உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகையும் அறிவித்தது. இந்த நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் ஓ. கோவில்பட்டி துணை சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலியாகியுள்ளான். பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.

மழைக் காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது என்பதே மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு தான். ஆனால், அப்படி விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டில் இருந்த இளந்தளிர்கள், அதிகாரிகள் அலட்சியத்தால் இப்படி தங்கள் உயிரை விடுவதற்கு யார் பொறுப்பு ஏற்பது?

குறிப்பாக, கொடுங்கையூர் சிறுமிகள் பலியான பின், அறுந்து கிடந்த அந்த வயர்களை சரி செய்ய வந்த மின்துறை அதிகாரி அளித்த பேட்டியே, அரசின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அந்த அதிகாரி கூறுகையில், "இந்த இடத்தில் கேபிள் பதிக்க எங்களுக்கு கார்ப்பரேஷன் அனுமதி கொடுக்கவில்லை. பில்லர் கட்டும் வேலையை நாங்கள் முன்பே தொடங்கிவிட்டோம். கார்ப்பரேஷனில் அனுமதி வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அதையும் மீறி தான் நாங்கள் வயர்கள் பதிக்கும் வேளைகளில் ஈடுபட்டோம். இதனால் எங்கள் மீது புகார்கள் சென்றது. நுகர்வோருக்கு உடனடியாக மின்சாரம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் வயர்களை சாலையில் போட்டு இருந்தோம். ஆனால், அதற்குள் மழை வந்து இங்கு வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேறு எந்த காரணத்திற்காகவும், சாலையில் மின் வயர்களை நாங்கள் போடவில்லை" என்று தெரிவித்து இருக்கிறார்.

ஆக, வடகிழக்கு பருவமழை பெய்யப் போகிறது என்ற தகவல் தெரிந்திருந்தும், கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகள் தாழ்வான பகுதி என தெரிந்திருந்தும், அங்கு பூமிக்கு அடியில் பதிக்கப்பட வேண்டிய வயர்களை பதிக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி வழங்கவில்லை. அந்தளவிற்கு அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு இருக்கின்றனர் அல்லது அவர்களுக்கு ஆணையிடும் அரசு மெத்தனமாக இருந்திருக்கிறது.

ஒருவேளை, அனுமதி வழங்கியிருந்தால், அந்த மின்துறை அதிகாரி கூற்றுப்படி, அங்கு வயர்கள் பதிக்கப்பட்டு இருந்திருக்கும். அச்சிறுமிகளும் இன்று சுவாசித்துக் கொண்டிருப்பர்.

எவ்வளவு தான் அரசு பணத்தைக் கொடுத்து இழப்பை ஈடுகட்ட முயற்சித்தாலும், அதைக் கொண்டு இத்தனை வருடங்கள் மூன்று குழந்தைகளையும் வளர்த்த அந்த பெற்றோரின் துக்கத்தை ஈடு செய்ய முடியுமா? அதிகாரிகளை சஸ்பென்ட் செய்வதால், அந்த மூன்று பிஞ்சுகளின் உயிரை திருப்பித் தர முடியுமா?

 

Kodungaiyur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment