வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 10 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்து, அது குறித்த விவரங்களை உடனடியாக ஒப்படைக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 10 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து, பதவி வாரியாக அது குறித்த தகவலை தெரிவிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மற்றும் கடந்த 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வராத நாட்களை கணக்கில் கொண்டு (10 நாட்கள்) சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே, தகவலின்றி பணிக்கு வராத நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் விதி 20, 22, 22‘ஏ’வை மீறி செயல்பட்டதற்காக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பணிக்கு வராத காலத்திற்கு தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்புகள் மற்றும் இதர விடுப்புகள் (ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மருத்துவ விடுப்புகள் தவிர) அனுமதிப்பது கூடாது. மருத்துவ விடுப்பாக இருந்தாலும் கூட, தற்போது உடனடியாக அனுமதி அளிக்காமல் மருத்துவ குழுவின் உண்மை தன்மை பெற்று அனுமதி அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். ஊதிய பிடித்தம் சார்ந்த விவரங்கள் பதவி வாரியாக பட்டியலுடன் மாவட்ட கல்வி அலுவலகத்தில் வருகிற 25-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.