உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்.

கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19 தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் பழங்குடி இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில், அறிவிப்பாணை முறையாக வெளியிடப்படவில்லை என அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி திமுக-வும் தொடர்ந்த வழக்குகளை விசாரித்து வரும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு செப்டம்பர் 18 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட வேண்டுமெனவும், நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் செப்டம்பர் 4 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிராக திமுக (அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நவம்பர் 6, 7 மற்றும் 10 என மூன்று நாட்கள் பட்டியலிடப்பட்டிருந்ததால், இருவரும் ஆஜராகி இருந்தாலும் வழக்கு விசாரணைக்கு எட்டப்படவில்லை. இதனையடுத்து, இருவரையும் நவம்பர் 14 ஆம் தேதி (நாளை) மாலை 3:30 மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி இருவரும் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், வார்டு மறு வரையறை மற்றும் தொகுதி மறுவரையறை செய்வதற்காக பயிற்சியளிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளதாகவும், மறுவரையறை பணிகள் தொடங்கியுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையில் குறிப்பிட்டபடி தொகுதி மறுவரையறை குழுவின் 5 வது கூட்டம் நவமபர் 9 ஆம் தேதி நடைபெற்றதாகவும், ஒவ்வொரு கட்ட பணிகளும் முறையாக நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தேதியை அறிவிக்க கூடாது என்ற எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கி தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று கோரியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இதில் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என்று தெரிகிறது.

 

×Close
×Close