திருச்சியில் அதிமுக சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது அமைச்சர் கே என் நேருவை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்த நிலையில், அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே என் நேருவும் எடப்பாடி பழனிச்சாமியை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (மற்றும்) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் நேரு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,
திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான பிரத்தேகமாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 48,000 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு 98 சதவீதம் அடையாள அட்டை வழங்கப்பட்டு மாநிலத்திலும் முதல் மாவட்டமாக திருச்சி திகழ்கிறது.
தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை உடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமில் 33 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 1600 காலி பணியிடங்கள் அவர்களிடம் உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்காதவர்களையும் தொடர்பு கொண்டு 100% அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிரத்யேகமாக காது கேளாதவர்களுக்கு தயாரிக்கப்பட்ட கைப்பேசிகளை வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது புதிய வகையான காய்ச்சல் பரவி வருகிறது , அதற்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இது குறித்து தெளிவாக தெரிவித்துள்ளார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் குறித்து தொடர்ந்து அநாகரிகமாக பேசுகிறார். அவரின் தரம் அவ்வளவுதான் அவர் அப்படித்தான் பேசுவார். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மீதே அப்போது நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது.

அதை நாங்கள் நீதிமன்றம் சென்று தான் சந்தித்தோம். ஆனால் அ.தி.மு.க வினர் தற்போது வழக்குப் போட்டதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள் என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil