/indian-express-tamil/media/media_files/2025/10/10/karur-adav-arjuna-2025-10-10-22-19-39.jpg)
16 நாட்கள் துக்கத்தில் இருக்கிறோம். காரியம் முடிந்தவுடன் உண்மை என்னவென்று சொல்வோம் என டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பானக த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், துணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே கரூரில் பலியான 41 நபர்களின் உறவினர்களிடம் வீடியோ காலிங்கில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும், விரைவில் அவர்களை சந்திப்ப விஜய் கரூர் செல்ல உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே டெல்லி சென்ற, த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பொதுவபாக, ஒரு குடும்பத்திலோ அல்லது வீட்டிலோ ஒரு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்போது, நாம் 16 நாட்கள் ஆழ்ந்த துக்கத்தில் இருப்போம். அதேபோல், எங்களுடைய தலைவரும், தமிழக வெற்றிக் கழகமும், எங்களின் தோழர்களும் கடந்த 16 நாட்களாக, எங்களுடைய குடும்பங்களில் ஒரு அங்கத்தினரை இழந்த உணர்வோடு, மிகக் கடும் வேதனையுடன் இருந்து கொண்டிருக்கிறோம்.
இந்த 16 நாள் காரியங்கள் முடியும் வரை, யாரும் பேசுவதற்கு முடியாத அளவுக்கு, மிகுந்த வலியுடன் இருந்துகொண்டிருக்கிறோம். இந்தத் துக்கமான சூழ்நிலையில், எங்களுடைய நியாயங்களைச் சொல்வதற்கோ, எங்கள் மேல் இருக்கும் அவதூறுகளுக்குப் பதில் சொல்வதற்கோ, நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய வலி மிகுந்த இந்தக் காலகட்டத்தில், எங்களுடைய உறவு 41 குடும்பங்களுடைய வலியோடு, ஒரு நிமிடம் கூட நாங்கள் அவர்களைவிட்டு விலகாமல் இருக்கிறோம்.
எங்கள் தலைவரின் முடிவும் சரி, எங்களுடைய முடிவும் சரி, எந்த விதமான அரசியலையோ, எங்கள் மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கோ, , எந்தவிதமான தவறான செய்திகள் பரப்பப்படும்போதோ, நாங்கள் பதில் கொடுக்காதது, எங்களுடைய வலிகளை, எங்களுடைய மக்களுக்காக நாங்கள் அவர்களோடு இருந்து கொண்டிருக்கிறோம் என்பதன் உண்மையே ஆகும்.
என்னென்ன உண்மைகள் இருக்கின்றனவோ, அந்த உண்மைகளை நாங்கள் கண்டிப்பாகச் சொல்வோம். அதற்கு இடையில், எங்களுடைய தலைவர் மற்றும் கட்சி மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, எங்களுடைய நிர்வாகிகளை கைது செய்யக்கூடிய நடவடிக்கைகளில் இறங்கும்போது, இந்த இழப்பையும், வலியையும் நாங்கள் அமைதியாக எங்களுடைய மக்களுடன் இருக்கும்பொழுது, இந்தக் கட்சியை முடக்க நினைக்கிறார்கள் என்பதை உணர்கிறோம்.
ஆகவே, எங்களுடைய தலைவர், ஒரு சாமானிய மனிதனுடைய நம்பிக்கையாக, நீதித்துறையை நாடி, உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக எங்களுடைய போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். நாங்கள் ஒவ்வொரு வலி மிகுந்த நாட்களிலும் சென்று கொண்டிருக்கிறோம், கரூரில் அவர்களைச் சந்திப்பதற்கான பயணத் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். உண்மை வெளியே வரும் என்று தலைவர் சொல்லியிருக்கிறார்.
சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்டிருக்கும் கட்சி மாவட்டச் செயலாளர்களையும், அவர்களுடைய குடும்பத்தையும் சட்டத்தின்படி வெளிக்கொண்டு வர வேண்டிய பணிகள் இருக்கின்றன. நீங்கள் எங்களின் உணர்வைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 16 நாட்கள் காரியங்கள் முடிந்தவுடனே, நாங்கள் கண்டிப்பாக உங்களுக்கு எல்லா உண்மைகளையும் விரிவாகத் தெரிவிப்போம் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.