தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டு திடலுக்கு வருவதற்கு 4 வழிகள் உள்ளன. இதில் தளபதி விஜய் எந்த வழியாக வருவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த விஜய், திடீரென நடிப்பில் இருந்து விலகி முழுநேர அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு நடிப்பில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறிய கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கோட் படத்தில் நடித்த விஜய் தற்போது தனது 69-வது மற்றும் கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இடையில் அரசியல் பணிகளை மேற்கொண்ட அவர், சமீபத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து முதல் மாநாட்டுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய், அதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தை தேர்வு செய்து, அதற்காக அனுமதி பெற வேண்டி காவல்துறையில் விண்ணப்பித்திருந்தார். காவல்துறையின் கேள்விக்கு பதில் அளிக்க தாமதமானதால் முதல் தேதியில் மாநாடு நடத்த முடியாத நிலையில், அக்டோபர் 27-ந் தேதி மாநாடு நடைபெறும் என்று 2-வது தேதி அறிவிக்கப்பட்டது.
மாநாடு பணிகள் தீவிரம்
இதனைத் தொடர்ந்து மாநாடுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு தொடர்பான பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார். சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் செட் மற்றும் பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பகுதியையும் கண்காணிக்கும் வகையில், சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் பயன்படுத்த தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மாநாடு நடைபெறும் அக்டோபர் 27-ந் தேதி மதியம் 12 மணிக்கு தொண்டர்கள் திடலுக்கு வந்துவிட வேண்டும் என்றும், அவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநாட்டுக்கான அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை பகுதியிலேயே, குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கோட்டை மதில் சுவர் போல், யானை சின்னத்துடன் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி முழுவதும் த.வெ.க கொடியால் நிரப்பப்பட்டுள்ளது. விஜய் தொண்டர்களுக்கு நடுவில் நடந்துகொண்டே பேசும் வகையில் ரேம்ப்வாக் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
4 வழிகளில் விஜய் வருவது எந்த வழி?
இந்த திடலுக்கு வருவதற்கு மொத்தம் 4 வழிகள் உள்ளன. சென்னையில் இருந்து வி.சாலை வரும்போது ஒரு வழியும், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வரும்போது இந்த பக்கம் ஒரு வழியும் உள்ளது. அடுத்து மாநாடு நடைபெறும் நேர் எதிரே 2 வழிகள் உள்ளன. இதில் தற்போது அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, தென் மாவட்டங்களில் இருந்து வி.சாலைக்கு வரும் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வழியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
வேலையாட்கள் உள்ளே செல்வது, பொருட்கள் எடுத்து செல்வது, கட்சி நிர்வாகிகள் உள்ளே செல்வது என அனைவருமே இந்த வழியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். மற்ற 3 வழிகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து வரும் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வழியில் தான் விஜய் திடலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தான் மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் வருவார்கள் என்பதால், இந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. சாலை முழுவதிலும் மாநாடு தொடர்பான கட்அவுட்கள் மற்றும் லைட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் மட்டுமல்லாமல் கட்சியின் சார்பிலும் ஒரு குழு அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.