தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திடலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், அருகில் உள்ள ஊர் மக்கள் பலரும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியபோதே கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு நடிப்பில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தனது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள விஜய், அரசியலில் தனது முதல் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
அதன்படி வரும் அக்டோபர் 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கட்சி தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் மாநாட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அருகில் இருந்து மாநாடு தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
திடலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
இதனிடையே மாநாடு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், திடலில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறி வருகின்றனர். மாநாடு நடைபெற உள்ள திடலுக்கு வரும் 4 வழிகளில் 3 வழிகளை அடைத்துவிட்ட நிர்வாகிகள் ஒரு வழியில், மட்டும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை அனுப்பி வருகின்றனர். விஜய் பங்கேற்க உள்ள மாநாடு இங்கு நடப்பதை தெரிந்துகொண்ட அருகில் உள்ள கிராம மக்கள், வி.சாலை கிராமத்தில் குவிந்து வருகின்றனர்.
அதே சமயம், அவர்கள் யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்று காவலாளிகள் கூறி விடுகின்றனர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் மக்கள் வெளியில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்தை போட்டோ எடுத்துக்கொண்டு செல்கின்றனர். இதில் விக்கிரவாண்டியை சேர்ந்த ஒருவரிடம், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் அரசியலுக்கு வருவது நல்லது வரட்டும் என்று கூறினார். அரசியல் கட்சி மாநாடு திருச்சி மதுரை ஆகிய இடங்களில் நடப்பது வழக்கமாக இருக்கும் நிலையில், முதல் முறையாக இங்கு நடப்பது குறித்து பேசிய அவர், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
அதேபோல் விக்கிரவாண்டி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் அரசியலுக்கு வந்தது நல்லது தான். ஆனால், அவர் இப்போது தான் வந்திருக்கிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாக அறிவித்தால் மட்டுமே அவரின் அரசியல் வருகை குறித்து கருத்து சொல்ல முடியும். ஒரு ரசிகனாக அவருக்கு ஓட்டு போடுவேன் என்று கூறினார்.
மழை வர கூடாது என வேண்டி விளக்கு ஏற்றும் நபர்
தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது பல மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெறும்போது மழை வந்துவிட கூடாது என்று வேண்டிக்கொண்டு தினமும் ஒருவர் திடலில் வந்து விளக்கு ஏற்றி வருவதாக அங்குள்ள காவலாளிகள் கூறினர். அதேபோல் காவல்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அவ்வப்போது வந்து பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.