கிராமப் புறங்களில் வேகமெடுக்கும் கொரோனா; பொது சுகாதார வல்லுநரின் வழிகாட்டுதல்!

தமிழக பொது சுகாதாரத் துறையின் மேனாள் இயக்குனர் மருத்துவர் குழந்தைசாமி கிராமப் புற மக்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Preventive Methods for Corona in Villages : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமடைந்துள்ளது. மக்கள் நெரிசலாக வாழும் நகரப் பகுதிகளில் கோரத்தாண்டாவம் ஆடிய கொரோனா வைரஸ், கிராமப் புறங்களிலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கிராமப்புறங்களில் தொற்றைக் கட்டுப்படுத்துவதும், தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் சவாலாக இருக்கும் என தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பொது சுகாதாரத் துறையின் மேனாள் இயக்குனர் மருத்துவர் குழந்தைசாமி கிராமப் புற மக்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

மேனாள் பொது சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் குழந்தைசாமி

கிராமப்புறங்களில் தொற்று பரவாமல் தடுப்பது எப்படி..?

 1. துக்க காரியங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினராக, இறுதி சடங்குகளை செய்பவராக இருந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.
 2. சுப காரியங்களையும் தள்ளி வைக்கலாம். தவிர்க்க முடியாத நிலையில், மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
 3. தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்கு செல்லக் கூடாது. நோயாளிகளாக மருத்துவமனைகளில் இருக்கும் உற்றார் உறவினர்களைப் பார்க்க மருத்துவ மனைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பிரசவத்தின் போது ஒரேயொரு பெண் துணையை உடன் வைத்திருத்தல் போதுமானது. பிறந்த குழந்தையைப் பார்க்க உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் மருத்துவமனைக்கு செல்லவதை தவிர்ப்பது நல்லது.

உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, வயது குறைந்த ஆரோக்கியமான உறவினர் ஒருவர், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் ஒருவரோ அல்லது அறிகுறிகளே இல்லாமல், சாதாரண சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் என இந்த வரிசையில் இடம்பெற்றிருப்போர் உடனிருக்கலாம்.

 1. நகர்ப் புறங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்புபவர்கள், வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இயன்ற வரையில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அனைவருக்கும் நல்லது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
 2. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு கொரோனா பெருந்தொற்று அடங்கும் வரை செல்லக் கூடாது.
 3. நியாய விலைக் கடைகள், பால் சொசைட்டி, உள்ளூர் மளிகைக் கடைகள் முதலான இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து கொண்டு செல்ல வேண்டும்.
 4. வெளி வேலைகளுக்கு சென்று திரும்புகிறவர்கள் கால்கள், கைகள் மற்றும் முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து தனித்து இருக்க வேண்டும்.
 5. கிராமங்களில் உள்ள பொது இடங்களுக்கு செல்லக் கூடாது. மக்களும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
 6. மளிகைக் கடைகள், பால் சொசைட்டி, நியாய விலைக் கடைகள் போன்ற இடங்களில் பணி புரிபவர்கள் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 7. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி..?

 1. கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு மருத்துவ மனைகளில் கூட்டம் குறைவாக உள்ள போதுதான் செல்ல வேண்டும்.
 2. கர்ப்பிணிப் பெண்ணின் உடன் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
 3. கர்ப்பிணிப் பெண்ணைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரக் கூடாது.
 4. கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை வளைகாப்பு விழா நடத்தக் கூடாது.
 5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மருத்துவ ஆலோசனையுடன் படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
 6. பிறந்த குழந்தையைப் பார்க்கவும் யாரும் வரக்கூடாது.
 7. குழந்தைக்கு தடுப்பூசி போடப் போகும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தனி இடம், தனி நேரம் ஒதுக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

 1. சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, கடுமையான தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 2. சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 3. நடமாடும் மருத்துவமனை மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய தொலைப்பேசி எண்கள்..?

உங்கள் ஊருக்கான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர், கிராம சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் கைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 104, 108 மற்றும் மாவட்ட, மாநில உதவி எண்களான 044-29510400; 044-29510500;
94443 40496, 87544 48477 ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டு, தேவையான நேரத்தில் அவசர உதவிக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

வீட்டில் உள்ளவர்கள் பல்ஸாக்சி மீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவை மூன்று நான்கு முறைகள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம். ஆக்சிஜன் அளவு மிக மிக அபாயகரமான அளவான 70 சதவீதத்திற்கும் கீழாகக் குறையும் போது தான் மூச்சுத்திணறல் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்றால் போதும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு காலதாமதமாக மருத்துவமனைக்கு செல்வது உயிரிழப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது பத்து பல்ஸாக்சி மீட்டர்கள் இருக்க வேண்டும்.

இதுவரை கொரோனா தொற்று ஏற்படாதவர்களையும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் விதண்டாவாதம் பேசுவோரையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களையம் தாக்கக் காத்திருக்கிறது கொரோனா வைரஸ். தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையை மனதில் கொண்டு, கிராம மக்கள் தயவு செய்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்க, வலியுறுத்தி உள்ளார்.

உயிரைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் அனைவரும் ஒன்றினைந்து மனம் தளராமல் செயல்பட்டு
கொரோனாவை வெல்வோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu villages positive rate peak how to prevent former public health director advices follow steps

Next Story
அமெரிக்காவில் இருந்தபடியே திருவாரூரில் மனைவியை கொல்ல கூலிப்படையை அனுப்பிய கணவர்Man working in the US hires henchmen to kill his wife
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com