தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாகவும் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகாலையும் மழை நீடிப்பதால், 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி,டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி நாள் மழை எச்சரிக்கை
நவம்பர் 4: செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,காஞ்சிபுரம்,சேலம்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை , நாமக்கல், சென்னை,கள்ளக்குறிச்சி,திருவாரூர்,வேலூர்,திருப்பத்தூர்,கரூர்,lதிருச்சி ஆகிய 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிபேட்டையில், பள்ளிகளுடன் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
சென்னை வானிலை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil