இன்றும் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!

இந்த காரணத்தினால் தான் சென்னையும், வட தமிழகமும் மற்ற பகுதிகளைவிட, அதிக மழையை பெறுகின்றன

சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால், சில மாதங்களாக கோடை வெயிலில் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் நேற்று இரவு 7:00 மணிக்கு லேசாக பெய்ய துவங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து, கனமழையாக மாறியது. ஒரு மணி நேரம் வரை விடாமல் பெய்த மழையால், சில மாதங்களாக கோடை வெப்பத்தில் தவித்த சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “வெப்பச் சலனம் காரணமாகவே, மழை பெய்துள்ளது. மேற்கில் இருந்து வீசிய காற்று வலுவாக இருந்ததால், காஞ்சிபுரம் அருகே மேகங்கள் கூடி, திருவள்ளூர், சென்னை மாவட்டம் வரை, திடீர் வெப்பச் சலனம் ஏற்பட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ., மழையும் மீனம்பாக்கத்தில், 3 செ.மீ., மழையும் பதிவானது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்னும் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஃபேஸ்புக்க்கில் பிரபலமான தமிழ்நாடு வெதர்மேன் இன்று வெளியிட்டுள்ள வானிலை செய்தி அறிக்கையில், “இன்றும் கூட சென்னையும் சென்னை புறநகர் பகுதிகளும் மழை பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாளை வட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய நல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

இன்று திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மட்டும் மழை பெறப் போகின்றன. இன்றும் மழை வருவதற்கான வளி மண்டல நிலைமைகளும் சாதகமாக இருக்கின்றன. காற்றின் தன்மையும் சாதகமாக இருக்கிறது.

நாளை திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் வட தமிழ்நாடு முழுவதும் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் மேற் சொன்ன ஊர்களை கவனிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

கீழே உள்ள படம் 11-ம் தேதி இரவு மழையை பற்றியது. வட தமிழ்நாடு கடலோரத்தில் இருந்த குறைந்த மட்ட காற்று, வட இந்தியாவில் ஏற்பட்ட குறைந்த காற்று அழுத்த மண்டலத்துடன் தடுக்கவே முடியாத அளவுக்கு குவிந்துள்ளது. இந்த காரணத்தினால் தான் சென்னையும், வட தமிழகமும் மற்ற பகுதிகளைவிட, அதிக மழையை பெறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாது.

×Close
×Close