/indian-express-tamil/media/media_files/2025/10/03/rn-ravi-and-selvaperunthagai-2025-10-03-07-45-50.jpg)
தலித்துகளுக்கு எதிரான சமூகப் பாகுபாட்டில் தமிழகம் மிக மோசமான இடத்தில் இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தீண்டாமைக்கு எதிராக மாணவர்கள் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி, "நாம் எங்கே இருக்கிறோம்? தலித்துகளுக்கு எதிரான சமூகப் பாகுபாட்டில், நமது மாநிலம் மிக மோசமான செயல்பாடுகளை பதிவு செய்துள்ளது. அதனால் இதற்கு எதிராக நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
தலித் மக்கள் சில பகுதிகளில் நடக்க அனுமதிக்கப்படாத கிராமங்கள் பற்றியும், தலித் மற்றும் தலித் அல்லாத மாணவர்களுக்கு இடையே வகுப்பறைகள் பிரிக்கப்பட்டிருப்பது பற்றியும் நான் செய்தித்தாள்களில் படிக்கிறேன். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய அவமானம், அண்டை மாநிலமான கேரளாவிலும் இந்தப் பிரச்சனை இருந்தது. ஆனால் இன்று, கேரளாவில் இருந்து ஒரு செய்தி கூட (பாகுபாடு பற்றிய) வருவதில்லை. அதே சமயம, தமிழகத்தில், இது ஒரு தினசரி நிகழ்வாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த செயல்களை காந்தியின் லட்சியங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று குறிப்பிட்ட ஆளுனர் ரவி, "உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு தலித் மாணவர் அல்லது தலித் குடும்பத்திற்கு எதிராகவும் நீங்கள் பாகுபாடு காட்ட மாட்டீர்கள் என்று ஒரு நிலைப்பாடு எடுங்கள்" என்று மாணவர்களை வலியுறுத்தினார்.
இதனிடையே ஆளுனரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை, ஆளுநர் ரவியின் கருத்துக்கள் "பொய்யானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று விமர்சித்துள்ளார். மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் தமிழகத்தை விட தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை அதிக அளவில் பதிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் தலித்துகள் அதிக அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்ற ஆளுநர் ஆர். என். ரவி இன்று (02.10.2025) வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானதும் அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்பட்டதுமான ஒன்று என்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
— Selvaperunthagai K (@SPK_TNCC) October 2, 2025
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய சமூக வரலாற்றை அவமதிக்கும்…
இந்த பட்டியலில், முதல் 10 இடங்களில் தமிழகம் இல்லை. பெரும்பாலான மாநிலங்களை விட தமிழகம் தலித்துகளுக்கு பாதுகாப்பானதாகவும், முற்போக்கானதாகவும் உள்ளது. ஆளுநர் தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்று, மக்களிடமும் தலித் சமூகத்திடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்," என்றும் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.