தமிழ்ச் செம்மொழி உயராய்வு மூடிட முயற்சி... மத்திய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!

ஏற்கனவே சென்னையில் உள்ள தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதனை செயலற்றதாக்கியுள்ளது .

சென்னையில் உள்ள தமிழ்ச் செம்மொழி உயராய்வு மூடிட முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓர் இனத்தை அழிப்பதென்றால் முதலில் அதன் மொழியைத்தான் அழிப்பர் பகைவர் என்கிறது வரலாறு. இக்கொடுமை தமிழ் இனத்திற்கு ஆயிரத்திற்கும் மேல் ஆண்டுகளாகவே நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியில் பாஜகவின் மோடி அரசு வந்ததிலிருந்தே தமிழ், தமிழினம், தமிழகத்திற்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அணிவகுக்கின்றன; அதிகரிக்கின்றன.

அதன் நீட்சிதான் தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை முடக்க நடுவண் அரசு மேற்கொள்ளும் தடாலடி நடவடிக்கையும். தன்னாட்சி அமைப்பான தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை மூடிவிட்டு, பதிலாக அதை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓர் அங்கமாக ஆக்குவதென நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.

இதற்கான பரிந்துரையை நடுவண் நிதி ஆயோக் அமைப்பு செய்துள்ளது. இந்தி, சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளுக்கான நிலைகளை அந்தந்த மாநிலத்தில் உள்ள நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைத்துவிடச் சொல்கிறது நிதி ஆயோக்.

“இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கே இங்கு ஆளுகை; மற்ற மொழிகள் யாவும் அவற்றிற்கு அடிமை!”
இந்தியை வளர்க்க நாடு முழுவதும் இந்தி பிரச்சார சபாக்கள்; இவற்றிற்கு கணிசமான அளவில் மத்திய நிதி!
செத்த மொழி சமஸ்கிருதத்திற்கோ வகைதொகையில்லாமலே வாரியிறைக்கப்படுகிறது மக்கள் வரிப்பணம்!

இத்தனையும் செய்யும் மத்திய அரசு செம்மொழி உயராய்வு நிறுவனத்தைக் கண்டுகொள்வதேயில்லை. ஏற்கனவே சென்னையில் உள்ள தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதனை செயலற்றதாக்கியுள்ள நிலையில், மோடி அரசு வந்ததும் அதற்கான நிதியையும் நிறுத்திவிட்டது. இப்போது அதை மூடிவிடவே முடிவு செய்கிறது மோடி அரசு.

இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடக் கோருகிறது!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close