நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி போராடும் மாணவர்கள் உண்மை நிலையை உணர்ந்து போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு மாவட்ட வாரியான முடிவுகள் சமூகநீதிக்கு எதிரானது அல்ல. பின்தங்கிய மாணவர்கள் மாவட்டங்கள் பெரும்பயன் அடைந்துள்ளன.
நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்ற பொய்ப்பிரச்சாரம் செய்த கட்சியினரின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான முடிவுகளில் நிறைய பின்தங்கிய மாவட்டங்கள் அதிசயப்படும் வகையில் சுமார் 5 முதல் 10 மடங்கு வரை அதிக இடங்கள் முந்தைய ஆண்டுகளைவிட அள்ளிச் சென்ற புள்ளி விபரம் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா பிறந்த அரியலூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு வெறும் 4 பேருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு இந்த ஆண்டு 21 பேருக்கு கிடைத்துள்ளது. இது தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நீலகிரி, தேனீ, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கணிசமாக அளவில் சென்ற ஆண்டை விட அதிக மாணவர்கள் வெற்றி பெற்று டாக்டராக உள்ளார்கள். குறிப்பாக பின்தங்கிய வகுப்பினருக்கு ஏறத்தாழ 40 சதவீதத்திற்கு இடம் கிடைத்துள்ள புள்ளி விபரம் சமூகநீதி பேசுவர்களின் கூற்று தவறானது.
நகர்ப்புறத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, மாணவர்கள் வழக்கம்போல் அதிக இடங்கள் பெற்றுள்ளதும் உண்மை தான், நகர்ப்புற, கிராமப்புற வேறுபாடுகளை எல்லா துறைகளிலும் உள்ள பிரச்சனையை நாளடைவில் தான் சரி செய்ய முடியும்.
குறிப்பாக கோழிமுட்டை நகரம் உருவாக்கி வந்த போலி சாதனையாளர்கள் விழிபிதுங்கி உள்ள அவலம் நீட் மூலம் வெளிவந்துள்ளது. நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் வரும் மாநில அளவிலான முதலிட சாதனையாளருக்கு தான் பெரும் அடி நீட் தேர்வுகளால். நாமக்கல் சென்ற ஆண்டு 957 மாணவர்கள் 2016 ல், இந்த ஆண்டு வெறும் 109 (2017) தான்.
கிருஷ்ணகிரியில் = 338 -> 82
தர்மபுரி = 225 -> 82
மொத்தத்தில் 32 ல் 25 மாவட்டங்களில் ஏறத்தாழ 15 மடங்கு மாணவர்கள் அதிகமாக இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்பதே உண்மை. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சென்னையில் 4 மடங்கு அதிகரித்து 113 (2016 ல்) -> 471 (2017).
திருச்சி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, வேலூர் மாவட்டங்களில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது ஆக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு தவிர பிற மாணவர்களுக்கும் நீட் மூலம் எந்தவித "Capitation" இல்லாமல் கோடிகள் இல்லாமல் வெறும் ஆண்டு கட்டணம் மட்டுமே செலுத்தி சேர முடிந்துள்ளது.
எனவே தொடர் போராட்டத்திற்கு தூண்டிவிட்டு குளிர்காயும் கட்சிகள் மனசாட்சியை இந்த புள்ளி விபரங்கள் தொடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.