‘டாஸ்மாக் வழக்கில், கமல்ஹாசனுக்கு தொடர்பே இல்லை’ வெடித்த சர்ச்சை

TASMAC News: மக்கள் நீதி மய்யமே சாதித்ததாக பிரபலங்கள் மூலமாக நடைபெறும் பிரசாரம், இதற்கான முழு முயற்சிகளை எடுத்த எளிய மனிதர்களை வேதனையில் ஆழ்த்தவே செய்யும்.

By: Updated: May 10, 2020, 08:28:36 AM

TASMAC Case: ‘டாஸ்மாக் கடைகளை அடைக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கமல்ஹாசன் கட்சிக்கு பங்கே கிடையாது. ஆனால் ஏதோ மக்கள் நீதி மய்யம் இதை சாதித்ததாக பலரும் போலியாக பிரசாரம் செய்கிறார்கள்’- இப்படியொரு குமுறல் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் உலவுகிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? என பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனாவுக்காக அடைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள், மே 7-ம் தேதி திறக்கப்பட்டன. முதல் நாளே சமூக இடைவெளியை பின்பற்றாமல் பல இடங்களிலும் கூட்டம் முண்டியதால், அடுத்த நாளே டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த விவகாரத்தையே மக்கள் நீதி மய்யத்தின் வெற்றியாக சிலர் கொண்டாடத் தொடங்கினார்கள்.

kamal haasan, indian 2 accident, indian 2 accident case, kamal haasan pleas, கமல்ஹாசன், இந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து, இந்தியன் 2, kamal haasan plea police torture me, போலீசார் துன்புறுத்துவதாக கமல்ஹாசன் முறையீடு, kamal haasan plea at chennai high court, kamal haasan police torture by the name of inquiry

மேற்படி தீர்ப்பு வெளியானதும், கமல்ஹாசன் வெளியிட்ட ட்வீட்டில், ‘நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி’ என குறிப்பிட்டார் அவர்.

இதில், ‘MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.’ என குறிப்பிடுவதன் மூலமாக, மக்கள் நீதி மய்யத்திற்கு இதில் பங்கிருப்பதாக கமல்ஹாசன் சொல்வதை உணர முடியும்.
கமல்ஹாசனாவது பரவாயில்லை… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், ‘பாராட்டுகள் கமல்ஹாசன் சார்! நாங்களெல்லாம் அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்!’ என கமல்ஹாசன் என்கிற ஒற்றை மனிதரின் வெற்றியாக இதை சித்தரித்துக் காட்டினார்.

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்

நடிகை கஸ்தூரி வெளியிட்ட ட்வீட்டில், ‘மக்கள் நீதி மய்யம் முயற்சியால் இன்று மக்களின் குரல் நீதிமன்றத்தில் கேட்டது. மக்களின் குரலை நீதிமன்றம் கேட்டது! தாற்காலிகம் என்றாலும் தார்மீக வெற்றி. தாய்மாருக்கு வெற்றி. சட்டபூர்வமாக சாதித்த மய்யத்தினருக்கு மனப்பூர்வமான நன்றி!’ என முழுக்க மய்யத்தின் வெற்றியாக பதிவு செய்தார்.

அடிப்படையான ஒரு விஷயம்… மக்கள் நீதி மய்யத்தின் வழக்கு அடிப்படையில் இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் எதிர்மனுதாரராக மக்கள் நீதி மய்யத்தை சேர்க்கவும் இல்லை. அங்கு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருப்பவர், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன். அதேபோல சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிலும் டாஸ்மாக் தரப்புக்கு எதிர்மனுதாரர்களாக ராம்குமார் ஆதித்தன், வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் பெயர்களே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதில் என்ன நடைபெற்றது என்பதை அறிய வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தனுடன் ஐஇ தமிழுக்காக பேசினோம். ‘அடிப்படையில் நான் அதிமுக காரன். முழுக்க பொதுநல நோக்கில் மே 5-ம் தேதி இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினேன். ‘கொரோனா ஒழிகிற வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது’ என்பதுதான் எனது வழக்கின் வேண்டுகோள். 5-ம் தேதி மாலை நீதிமன்றத்தில் என் வழக்கை பதிவு செய்தார்கள்.

அன்று இரவே டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு இரு அரசாணைகளை பிறப்பித்தது. அந்த ஆணை என்ன என்பது யாருக்கும் உடனடியாக சொல்லப்படவில்லை. 6-ம் தேதி எனது வழக்கில் நான் வாதிட்டபோதுதான், ‘இரு அரசாணைகள் போடப்பட்டிருக்கிறது. வழக்கு தொடுப்பதாக இருந்தால், அந்த ஆணைகளை எதிர்த்துதான் வழக்கு தொடுக்க முடியும்’ என அரசுத் தரப்பு வாதிட்டது.

எனினும் இதற்கு முன்பாகவே, மதுக்கடைகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருந்தது. 4-ம் தேதி கர்நாடகாவிலும், 5-ம் தேதி ஆந்திராவிலும் திறந்துவிட்டார்கள். தமிழகத்திலும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கை 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

ஆனாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மது வாங்கச் செல்கிறவர்கள் ஆதார் அட்டை கொண்டு செல்வது என சில நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. 7-ம் தேதியும், 8-ம் தேதியும் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பதை மீடியா செய்திகள் உணர்த்தின.

8-ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் சார்பில், ‘மது வாங்க வருகிறவர்கள் ஆதார் கார்டு கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட உத்தரவை’ தளர்த்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். அப்போது, இ பாஸ் தொடர்பாக நான் தொடர்ந்த பொதுநல வழக்குக்காக நானும் வீடியோ கான்பரன்ஸில் இருந்தேன். ‘14-ம் தேதி முறையிடுங்கள்’ என அப்போது டாஸ்மாக் தரப்பிடம் நீதிபதிகள் கூறிவிட்டனர். இதனால் வீடியோ கான்பரன்ஸில் இருந்து நான் வெளியேறினேன்.

இந்தச் சூழலில் வழக்கறிஞர் ராஜேஷ், டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்காததையும், உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவரே இதற்கான மனு போட்டு, எனது வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்ய வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், பொது முடக்கம் முடிகிற வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருக்கிறது. எனது வழக்கில், வழக்கறிஞர் ராஜேஷ் வலியுறுத்தலின்படி இது நடைபெற்றது என்பதுதான் நிஜம்.

மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் வழக்கறிஞர்கள் விசாரணையின்போது வீடியோ கான்பரன்ஸில் தங்கள் கருத்துகளை கூறியிருக்கலாம். ஆனால் வழக்கில் அதிகாரபூர்வ மனுதாரர்கள் கிடையாது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆணையும், டாஸ்மாக் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவும் இதற்கு சாட்சிகள். எனினும் கமல்ஹாசன் பிரபலமானவர் என்பதால், அவரது கட்சி சாதித்ததாக வெளியே செய்திகள் வருகின்றன. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை’ என்றார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்.

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தரப்பில் இது குறித்துக் கேட்டபோது, ‘ரவிக்குமார், கஸ்தூரி ஆகியோர் முழுக்க நாங்களே வழக்கு தொடுத்து வாதிட்டதாக நினைத்திருக்கலாம். நாங்கள் அப்படி கூறவில்லை. அதேசமயம், பல்வேறு தரப்பு வழக்கறிஞர்களும் வாதங்களை வைத்தார்கள் என்ற அடிப்படையில், அனைவரின் கூட்டு முயற்சி இதில் இருக்கிறது’ என்றார்கள்.

மக்கள் நீதி மய்யமே சாதித்ததாக பிரபலங்கள் மூலமாக நடைபெறும் பிரசாரம், இதற்கான முழு முயற்சிகளை எடுத்த எளிய மனிதர்களை வேதனையில் ஆழ்த்தவே செய்யும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tasmac news kamal haasan takes credit of tasmac chennai high court case issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X