Advertisment

ரூ.800 கோடி பழைய தாள்கள் மாற்றம்: அமைச்சர்களை காக்க டாஸ்மாக் துடிப்பதா? - கேள்விகளை அடுக்கும் ராமதாஸ்

டாஸ்மாக் கணக்கில் பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்படவில்லை என்றால், அதுகுறித்து விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கை அனுப்பியது ஏன்?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாமக நிறுவனர் ராமதாஸ்

Tamil Nadu news today in tamil

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிந்தைய காலத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் ரூ.800 கோடி பழைய ரூபாய் தாள்கள் வங்கிகளில் செலுத்தப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 2-ஆம் தேதி நான் வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கு டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் விளக்கம் முன்னுக்குப்பின் முரணாக, குழப்பங்களின் குவியலாக உள்ளது.

Advertisment

பழைய ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் ரூ.800 கோடி மதிப்புள்ள செல்லாத பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாகவும், அப்பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அறிவிக்கை அனுப்பியிருப்பதாகவும் கடந்த 2-ஆம் தேதி முன்னணி தமிழ் நாளிதழ்களில் பரபரப்பு செய்தி வெளியாகியிருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் உட்பட வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்து வைத்திருந்த பழைய ரூபாய் தாள்களை மாற்றினார்கள் என செய்தி வெளியாகியிருந்ததால், அதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை; மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

இந்தக் குற்றச்சாற்று குறித்து எதுவும் தெரிவிக்காத டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடைகளில் பழைய ரூபாய் தாள்களை வாங்க அனுமதி அளிக்கவில்லை என்றும், இதுதொடர்பான எனது குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது ஆகும் என்றும் கூறியிருக்கிறார். செல்லாத ரூபாய் தாள்கள் மாற்றப்பட்டது தொடர்பான குற்றச்சாற்றால் நிம்மதியிழந்த அமைச்சர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இப்படி ஒரு மறுப்பை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அளித்துள்ளார். ஆனால், ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் கூறியதைப் போன்று பழைய ரூபாய் தாள்களை மாற்ற அனுமதிக்கவில்லை என்று கூறியிருப்பதன் மூலம், கடந்த காலங்களில் கூறிவந்த தகவல்களில் இருந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இப்போதும் முற்றிலுமாக முரண்பட்டிருக்கிறார்.

ரூ.800 கோடி பழைய பணம் மாற்றப்பட்டது தொடர்பாக வருமானவரித்துறையிடமிருந்து அறிவிக்கை வந்ததைத் தொடர்ந்து, மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் தலைமை அலுவலகம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியது. அதில், ‘‘பழைய தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, அத்தாள்களை வாங்கக்கூடாது என குறுஞ்செய்தி மூலம் மேற்பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் 15.11.2016 வரை ஒரு வாரத்திற்கு பழைய ரூபாய் தாள்களை வாங்கி வங்கியில் செலுத்தியுள்ளார்கள். இதுபற்றி ஒரு வாரத்தில் விளக்கமளிக்காவிட்டால் மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.

பண மதிப்பிழப்புக்குப் பிறகு பழைய ரூபாய் தாள்களை வாங்கக்கூடாது என மேற்பார்வையாளர்களுக்கு குறுஞ்செய்தி தெரிவித்ததாக முதல் அறிவிக்கையில் கூறியுள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், இப்போது ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விளக்க அறிவிக்கையில், பழைய ரூபாய் தாள்களை வாங்கக் கூடாது என முதலில் மின்னஞ்சல் மூலமாகவும், பின்னர் தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். ஏன் இந்த முரண்பாடு என்பதை டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விளக்குவாரா?

அதேபோல், மேற்பார்வையாளர்களுக்கு முதலில் அனுப்பிய அறிவிக்கையில் மது விற்பனைக்காக பழைய ரூபாய் தாள்களை வாங்கி, வங்கியில் செலுத்தியது ஏன்? என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டிருந்தது. ஆனால், இப்போது வெளியிட்டுள்ள விளக்கத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டால் அதை பெறக்கூடாது என்று டாஸ்மாக் வங்கிக் கணக்கு பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பழைய ரூபாய் தாள்களை பெறக்கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தால், அவற்றில் டாஸ்மாக் ஊழியர்களால் எப்படி பணம் செலுத்தியிருக்க முடியும்? இந்த இரண்டில் எது உண்மை?

டாஸ்மாக் வங்கிக் கணக்குகளில் ரூ.800 கோடிக்கு மதிப்பிழக்கப்பட்ட பணம் செலுத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்கும்படி வருமானவரித்துறையிடமிருந்து டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவிக்கை வந்தது உண்மையா... இல்லையா?

டாஸ்மாக் கணக்கில் பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்படவில்லை என்றால், அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கை அனுப்பியது ஏன்?

பழைய ரூபாய் தாள்களை வாங்க வேண்டாம் என்று மேற்பார்வையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர், அதற்கான ஆதாரங்களை தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிகளுடன் வெளியிட்டு நிரூபிக்கத் தயாரா?

பொதுவாக உண்மையை சொல்லும் போது குழப்பங்களுக்கோ, முரண்பாடுகளுக்கோ இடமிருக்காது. ஆனால், மதிப்பிழக்கச் செய்யப்பட்ட ரூபாய் தாள்களை ஆட்சியாளர்களுக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்த டாஸ்மாக் நிர்வாகம், இப்போது ஆட்சியாளர்களின் அழுத்தத்திற்கு பணிந்து உண்மையை மறுக்கும் போது தான் பொய்களையும், முரண்பாடான தகவல்களையும் கூற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தான் அதிகாரிகளின் கடமையே தவிர, ஊழல் அமைச்சர்களை பண மாற்ற மோசடியிலிருந்து காப்பாற்ற வேண்டிய தேவையில்லை. எனவே, செல்லாத பணத்தை மாற்றும் விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை வருமானவரித்துறைக்கு தெரிவித்து, தவறு செய்தவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்" என்று தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Pmk Tasmac Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment