நாள்தோறும் அதிமுக-வில் எந்த அணிக்கு, யார் மாறுவார்கள் என பரபரப்பாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்த அணி தாவலாக டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த தென்காசி தொகுதி எம்பி வசந்தி முருகேசன் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு மாறியுள்ளார்.
அதிமுக அணிகளுக்குள் நாள் தோறும் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, ஜக்கையன் நீங்கலாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார். டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் ஜனநாயக படுகொலை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து டிடிவி தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும், தகுதி நீக்கத்தால் டிடிவி தரப்பு ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தினகரன் அணியில் இருந்த தென்காசி தனித் தொகுதியில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட எம்.பி, வசந்தி முருகேசன் திடீரென இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு மாறியுள்ளார். இதனால், தினகரன் ஆதரவு எம்பி-க்களின் பலம் 7-ஆக குறைந்துள்ளது.
விஜிலாசத்யானந்த், எ.பி.நாகராஜன், என்.கோகுலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், செங்குட்டுவன், உதயகுமார் உள்ளிட்ட எம்பி-க்கள் தினகரன் அணியில் உள்ளனர். அதேபோல், அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களின் பலம், திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸுடன் சேர்த்து 21-ஆக உள்ளது. அதில், 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி வசந்தி, ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடர்வார்கள். அவர்களுடன் நான் இணைந்து பணியாற்றுவேன். திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைத்து விடுவேன் என தினகரன் கூறுகிறார். ஆட்சியை கலைப்போம் என கூறுவது எனக்கு பிடிக்கவில்லை. எம்எல்ஏ-க்களை சிறை பிடித்து வைத்துள்ளனர். ஆட்சி தொடர வேண்டும் என்பதால் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்றார்.