'தலைவர் இஸ் பேக்'... ஜாமீனில் வந்ததும் ஆடியோ வெளியிட்ட MY V3 Ads நிறுவனர்!
ஜாமீன் கிடைத்த சக்தி ஆனந்தன் நேற்றிரவு கோவை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த சக்தி ஆனந்தன் தனது யூடியூப் சேனலில் 'தலைவர் இஸ் பேக்' என தலைப்பிட்டு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
coimbotore:கோவையை தலைமையிடமாக கொண்டு My V3 Ads என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்நிலையில், My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி் ஆனந்தன் மீது அண்மையில், சிலர் மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
Advertisment
இந்நிலையில், தன் மீதும், My V3 Ads நிறுவனம் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ம் தேதி போராட்டம் நடத்தினார்.
ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அவரிடம் மனுவை பெற்ற பிறகும் காவல் ஆணையர் வர வேண்டும் என 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்திய போதும் கலைந்து போகாமல் காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து, சக்தி ஆனந்தை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, My V3 Ads நிறுவனத்தின் மண்டல இயக்குநர்கள் ஐந்து பேர், அனுமதியின்றி கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தை ஒரு நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து மத்திய சிறையில் அடைத்தனர். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கேட்டு நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார்.
ஜாமீன் கிடைத்த சக்தி ஆனந்தன் நேற்றிரவு கோவை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த சக்தி ஆனந்தன் தனது யூடியூப் சேனலில் "தலைவர் is back" என தலைப்பிட்டு , வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகள் திட்டமிட்டபடி அனைத்தும் கிடைக்கும் என்ற ஆடியோவை வெளியிட்டுள்ளர்.