/indian-express-tamil/media/media_files/2025/10/05/karur-poster-2025-10-05-13-52-34.jpg)
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கடந்த மாதம் 27-ந் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் கூட தவெகவினர் தெரிவிக்கவில்லை என நீதிமன்றமும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு கேள்விகளை அடுக்கி வந்தனர்.
இந்தநிலையில் விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில், தமிழக வெற்றிக்கழகத்தினர் 2 விதமான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தளபதியை காப்போம்! தமிழகத்தை மீட்போம்!! எவ்வளவு வலிகள் தந்தாலும் நாங்கள் வழி மாற மாட்டோம்! என்றும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்! எவ்வளவு வலிகள் இருந்தாலும் நாங்கள் வழி மாற மாட்டோம்! நாங்கள் உங்களுடன்தான் நிற்போம்! என்று விஜய்க்கு ஆதரவாக ஒட்டியுள்ளனர்.
இந்த சுவரொட்டி நகர் முழுவதும் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் மற்றும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.