மக்களை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் இன்று சந்தித்துப் பேசினார். நேற்று திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்துப் பேசிய நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆளுநருடனனான இந்த சந்திப்பு என்பது நட்பு ரீதியிலானது.
கூவத்தூரில் பணபேரம் நடந்ததாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விளக்கம் அளித்துவிட்டார். வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் குதிரை பேரம் நடந்திருப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் எந்தவித உண்மையும் இல்லை. கட்சித் தாவும் தடை சட்டம் வந்த பின்னர் எந்த எம்எல்ஏ-வும் கட்சி தாவ முடியாது. அவ்வாறு, கட்சி தாவினால் எம்எல்ஏ-க்களின் பதவி பறிபோகும் என்பது அறிந்தது தான். அப்படி இருக்கும் நிலையில், எம்எல்ஏ-க்களுக்கு பணம் கொடுப்பது என்பது சாத்தியமில்லை.
ஆட்சியை கலைப்பது தான் திமுக-வின் வேலை. காலம்காலமாக திமுக அதைத்தான் செய்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஏன் கலைக்க வேண்டும்? ஆட்சி முழுமையாக நடக்க வேண்டும் என்று தானே மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி கலையாது, கவிழாது என்று கூறினார்.