தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்கவிருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1000 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம் என்பது பெரிய கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலையை கண்டு வியந்த யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக இதனை அங்கீகாரம் செய்துள்ளது.
இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் தியான நிகழ்ச்சி நடக்கவிருந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், பழமையான கட்டுமானம் பாதிக்கப்படுவதாக கூறி, இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை இன்று பிற்பகலில் விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் கோவிலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று கூறி தடை விதித்தனர்.
யமுனை ஆற்றின் கரையில் இது போன்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டதாக கூறி, பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் வரும் 10-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, அரங்குகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.