Advertisment

கோவையில் ஆளுனர் உருவ பொம்மை எரித்து போராட்டம்

கோவையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்

author-image
WebDesk
New Update
கோவையில் ஆளுனர் உருவ பொம்மை எரித்து போராட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்றார். ஆளுநரின் இந்தக் கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Advertisment

அதேபோல் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரங்கேறிய நிகழ்வுகளும் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ’தமிழக ஆளுநர்’; புதிய சர்ச்சையை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழ்

இந்நிலையில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அக்கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆளுநரின் உருவ பொம்மையை எடுத்து அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஆளுநரின் புகைப்படத்தை எரித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. தற்போது உள்ள ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லுவதற்கு கூட தயங்குகின்றார்.

ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்றவற்றில் இருக்கக்கூடிய பிரதேசம் என்கின்ற சொல்லும் நாட்டை குறிப்பது தான். அப்படி இருக்க தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறுவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.

ஆளுநர் சமூக நீதி, பெண் உரிமை, பெரியார், அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை கூற மறுப்பதாகவும் இவற்றை எல்லாம் கண்டித்து அவரது உருவ பொம்மை எரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு கிடையாது எனவும் ஆறுச்சாமி தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment