சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதில் ரூ. 62,738 கோடி மதிப்பிலான திட்டங்களே செயலாக்கத்துக்கு வந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெர்வித்துள்ளார்.
சென்னையில் இன்று இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) மூன்றாவது தென் மண்டல மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை தமிழகம் கண்டு வருகிறது. இந்த வளர்ச்சியினை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, அம்மா அவர்கள் வகுத்து தந்த விஷன் 2023 என்ற தொலை நோக்குத் திட்டம் பல்வேறு துறைகளில் நமது மாநிலம் எய்த வேண்டிய இலக்குகளையும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும் மிக துல்லியமாக குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்கிட, ஏற்கணவே உள்ள நல்ல சூழலை, மேலும் எளிமைப்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்புதல்களை மற்றும் உரிமங்களை ஓரே விண்ணப்பத்தின் மூலம் ஆன் லைனில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து விசாகப்பட்டினம் - சென்னை - தூத்துக்குடி - கன்னியாகுமரி வரை ஒரு தொழிற் பெருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையொப்பமிட்ட ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ரூ. 62,738 கோடி மதிப்பிலான 61 திட்டங்கள் பல்வேறு கால கட்டங்களில் செயல்லாக்கத்தில் உள்ளன. இதன் மூலம் 76,777 பேருக்கு வேலை கிடைக்கும்.
2016ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைப் போல, அடுத்த உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 2018ம் ஆண்டு சிறப்பாக நடத்தப்படும்.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தேவையான கொள்கை மாற்றங்கள், புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தொழில் தொடங்கி நடத்தும் சூழ்நிலையை எளிமைப்படுத்துத, மனித வள மேம்பாட்டிற்கு மேலும் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை தொடர்ந்து இந்த அரசு செய்யும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.