அண்ணா பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவகர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கை விட்டு, அவரை ஓய்வு பெற அனுமதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவகர். துணை வேந்தர் பதவிகாலம் முடியும் போது அவருக்கு 58 வயது. ஓய்வு பெறும் வயது 60 என்பதால், மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கு, அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். இந்த நிலையில், அவர் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி அவர் ஓய்வு பெற இருந்தார். அவர் மீது தீவிர குற்றச்சாட்டுக்களை சுமத்தி, பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவுவிட்டது. பணியில் இருந்து ஓய்வு பெற அவரை அனுமதிக்கவில்லை.
பின்னர் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகத்தை தமிழக அரசு நியமித்தது. அவர் விசாரணை நடத்தி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். அதில், மன்னர் ஜவகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர் மீதான குற்றச்சாட்டை கைவிடலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த அறிக்கையின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகம் எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னர்ஜவகர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மூர்த்தி ஆஜராகி ‘இந்த விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்ட உயர்கல்வித்துறை, இந்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் வைத்து தகுந்த முடிவினை எடுக்கும்படி கடந்த ஏப்ரல் 24 ம் தேதி உத்தரவிட்டுள்ளது’ என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் 6 வார காலத்துக்குள் தகுந்த முடிவினை எடுத்து, இறுதி உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இந்த விசாரணை அறிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், மன்னர் ஜவகர் மீதான குற்றச்சாட்டை கைவிடுவதாகவும், அவரை ஓய்வு பெற அனுமதிக்கலாம் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், சிண்டிகேட் கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, மன்னர் ஜவகர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கைவிடப்படுகிறது. அவர் ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறார். ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பண பலன்களும் அவருக்கு வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.