நீட் வழக்கு: பின் வாங்கிய மத்திய அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஓர் ஆண்டு விலக்கு கோரும் முயற்சிக்கு எதிர்பார்த்ததை விட ஏராளமான தடங்கல்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஓர் ஆண்டு விலக்கு கோரும் முயற்சிக்கு எதிர்பார்த்ததை விட ஏராளமான தடங்கல்கள் அடுத்தடுத்துவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், நீட் வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது தெரிவித்த கருத்தில் இருந்து மத்திய அரசு தற்போது பின் வாங்கியுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. மாநில அரசு கொண்டு வந்த அரசாணை உள்ளிட்ட நீட் குழப்பங்களால், தமிழகத்தில் இன்றளவும் மருத்துவக் கலாந்தாய்வு நடைபெறாமல் உள்ளது.

இதனைதொடர்ந்து, தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது என திட்டவட்டம் தெரிவித்த நீதிமன்றங்கள், நீட் விவகாரத்தில் 85 சதவீத அரசாணையை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. அரசாணை ரத்து தொடரும் எனவும் உத்தரவிட்டன. மேலும், கலந்தாய்வை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றங்கள் அறிவுரை வழங்கின.

இதனிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதனடிப்படையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட முன்வடிவுக்கு, மத்திய சட்ட அமைச்சகம் உள்பட மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

அதனையடுத்து, நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக் கோரி, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த நீட் ஆதரவு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 17-ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்ட முன்வடிவுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், நீட் தொடர்பான அவசர சட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் சார்பில் வாதிடப்பட்டன.

அவசர சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு என மத்திய அரசு வாதிட்டது. மேலும், நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதால் அவசர சட்டத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என தெரிவித்த மத்திய அரசு, இரண்டு, மூன்று நாட்களில் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு பதிலாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி இந்த விளக்கத்தை அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எந்த ஒரு மாணவரும் பாதிக்காத வகையில் அவசரச் சட்டம் இருக்க வேண்டும் என கூறியது.

இந்நிலையில், “நீட்டில் இருந்து ஓர் ஆண்டுக்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் அவசர சட்டம் உகந்தது இல்லை. சட்டப்பூர்வமாக அது செல்லாது” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் இந்த திடீர் பின்வாங்கல் தமிழகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக அமையும் பட்சத்தில், நீட் தேர்வின் அடிப்படையிலேயே இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close