நீட் விவகாரத்தில் நிர்மலா சீத்தாராமனின் வாக்குறுதி என்ன ஆனது? ஸ்டாலின் கேள்வி

நீட் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொடுத்த வாக்குறிதி என்ன ஆனது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இது மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, நீட் விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: இந்த ஆர்ப்பாட்டம் 24 மணி நேரத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் வங்கிக்கப்பட்டுள்ள காரணத்தாலும், மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் கனவுகள் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக, அதற்கு துணை நிற்கும் தமிழகத்தில் நடைபெற்று வரும் குதிரை பேர அதிமுக ஆட்சியும் தான் காரணம். தமிழகத்தின் உரிமை மத்தியில் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் மட்டுமல்லாமல் அனைத்து விவகாரங்களுக்கும் இது பொருந்தும்.

தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தவரை நீட் தேர்வை நுழைய விடவில்லை என்பது வரலாறு. நீட் தேர்வு குறித்து தீர விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருக்கிறது. ஆனால், மத்திய – மாநில அரசுகள் அது குறித்து சிந்திக்கவில்லை. விரும்பாத மாநிலத்தை விட்டு நீட் தேர்வு நடத்துங்கள் என நாடாளுமன்ற நிலைக்குழு கூறியிருக்கிறது. அதுவும் தற்போது மீறப்பட்டுள்ளது.

நீட் தரவரிசை பட்டியலை பார்த்தால், சமூக நீதியை கெடுக்க தான் நீட் தேர்வை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் 20 மாணவர்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பதை காணும் போது நெஞ்சம் வேதனையடைகிறது.

கிராம புற மாணவர்கள் மருத்துவர்களாவதை பாஜக விரும்பவில்லை. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிடப்பில் போட்டுள்ளதன் மூலம், தமிழக சட்டப் பேரவையை மத்திய அரசு கேவலப்படுத்தியுள்ளது என்றார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஓர் ஆண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என்றார். அது நிறைவேற்றப்பட்டுள்ளதா? அவரது வாக்குறுதி என்ன ஆனது? எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைக்கப்படும் என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். அதனையேற்று தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து மூன்று அமைச்சகங்களின் ஒப்புதலையும் பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

மாணவர்களின் சாபம் உங்களை ஆட்சியில் நீடிக்க விடாது என ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது எச்சரிகை விடுத்த ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்று வரும் குதிரை பேர ஆட்சியை அகற்ற வேண்டும் என சூளுரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close