கஜா நிவாரண நிதி: மத்திய அரசு மீது தமிழக அரசு பரபரப்பு குற்றச்சாட்டு!

இன்று வரை வேறு எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை.

மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு தொகை இருந்தும், கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு உதவவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

கஜா நிவாரண நிதி :

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பேயாட்டம் ஆடி சென்ற கஜா புயலின் தாக்கம் இன்று வரை ஆறாத வடுவாய் உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று வரை தங்களது வாழ்வாதரத்தை எண்ணி கதறி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை சரிசெய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.

நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 353 கோடி ரூபாயை வழங்கியது என்றும் அதைத்தவிர இன்று வரை வேறு எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், மத்திய குழு ஆய்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்கலாம், ஆனால் தாமதப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விளக்கங்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும், இது தொடர்பாக தமிழக அரசு அளித்த விளக்கங்கள் நேற்று மதியம் மத்திய அரசிற்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையாக உள்ளதா? எப்போது முடிவெடுக்கப்படும்? என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு (20.12.18) ஒத்திவைத்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

×Close
×Close