எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை : புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம்

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று சபாநாயகர் வைத்திலிங்கம் சொல்லியுள்ளார்.

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று சபாநாயகர் வைத்திலிங்கம் சொல்லியுள்ளார். இதையடுத்து, பாஜகவினர் எம்.எல்.ஏ.வாக்க செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுவை பாஜக தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை உள்துறை அமைச்சகம் நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவித்தது. இதற்கான கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் மூவரும் புதுவை சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்தனர். அவர் மேலும் சில ஆவணங்க்ளைக் கேட்டு, அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதுவை போன்ற யூனியன் பிரதேசத்தில் மாநில அரசு பரிந்துரையின் பேரில்தான், நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி செய்வதால், புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடப்பதால், ஆரம்பத்தில் இருந்தே பனிப்போர் நிலவி வந்தது. இதையடுத்து மாநில அரசு சார்பில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான பரிந்துரை அனுப்பப்படவில்லை. இந்நிலையில் உள்துறை அமைச்சகமே நேரடியாக 3 பேரை அறிவித்தது. இப்போது அது சர்சையாகி இருக்கிறது.

கவர்னரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட 3 பேரும் புதுவை சட்டசபை செயலாளரை சந்தித்து, தங்களை பாஜக எம்.எல்.ஏ.க்களாக அங்கிகரித்து அலுவலக அறைகள் ஒதுக்கித்தர வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். கவர்னரின் செயலாளர் தேவநீதிதாசிடம் இருந்தும், அவர்கள் மூவரையும் எம்.எல்.ஏ.வாக அங்கிகரிக்குமாறு கடிதம் வந்தது.

இந்த கடிதங்களை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் வழங்கினார். கவர்னரின் கடிதத்தை ஏற்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார். அதில் அவர் சில குறிப்புகளை எழுதி அனுப்பியதாக தெரிய வந்துள்ளது. அந்த விபரங்கள் இப்போது வெளியே கசிந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

‘நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 3 பேரும் என்னிடம் மத்திய அரசு கடித்தை காண்பித்தார்கள். அதில் அவர்கள் பெயர்கள் மட்டுமே இருந்தது. தந்தை பெயரோ முகவரியோ இல்லை. எனவே முழு தகவல் அடங்கிய உத்தரவு இருந்தால்தான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று சொன்னேன்.

மேலும் 3 பேரையும் எம்.எல்.ஏ.வாக நியமித்ததற்கான உத்தரவு எதுவும் சபாநாயகர் அலுவலகத்துக்கு, நியமிக்கும் அதிகாரம் உள்ள உரிய நபர்களிடம் இருந்து வரவில்லை. எனவேதான் அவர்களுக்கு நான் பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை.

நீங்கள் பதவி பிரமாணம் செய்து வைத்து இருக்கிறீர்கள். சபாநாயகர் இருக்கும் போது பதவி பிரமாணம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மட்டுமே எம்.எல்.ஏவாக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர்தான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். எனவே நீங்கள் பதவி பிரமாணம் செய்து வைத்ததை ஏற்க முடியாது. அவர்கள் 3பேரையும் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற அனுமதிக்க முடியாது’ என்று சபாநாயகர் வைத்திலிங்கம் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

இதனால், மத்திய அரசுக்கும் புதுவை அரசுக்கும் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. 3 பேரும் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைய வேண்டுமானால், சபாநாயகரின் அனுமதி வேண்டும். அவர் மறுத்தால் சட்டசபைக்குள் அவர்கள் நுழையவே முடியாது. இதனால் அவர்கள் மூவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close