இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று சொன்னவர்களே குளத்தை தூர்வாருகிறார்கள்: ஸ்டாலினை கலாய்கும் தமிழிசை

திமுகவினர் கோயில் குளங்களை மட்டும் குறி வைத்து தூர்வார, ஜோதிடர்களின் அறிவுரையே காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலினை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை கண்டித்து கடந்த 8ம் தேதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், குடி நீர் பஞ்சத்துக்கு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசே காரணம். அவர்கள் குளத்தை தூர் வார எந்த முயற்சியும் எடிக்கவில்லை. ஆற்று மணல் கொள்ளை அடித்துவிட்டார்கள். நிர்வாக சீர்கேடுகளால் தண்ணீர் பற்றாகுறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் ஆங்காங்கு உள்ள குட்டைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், ஆறுகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், பாதுகாத்திடவும் கழகத்தினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். மாவட்டக் கழகச் செயலாளர்களில் தொடங்கி நகர-ஒன்றிய-பேரூர்-கிளைச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் பொதுநல அமைப்புகளுடன் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் இணைத்து, உரிய அனுமதியினைப் பெற்று இத்தகையப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சொல்லால் அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையைவிட, இந்த செயல் கடும் எச்சரிக்கையாக அமையட்டும் அ.தி.மு.க. அரசுக்கு! என்றும் சொல்லியிருந்தார்.

அறிவிப்போடு நில்லாமல், தானே களத்தில் இறங்கினார். சைதாப்பேட்டை கோதண்டராமர் கோயில் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள ஜி.கே.எம் காலணி முத்துமாரியம்மன் கோவில் குளத்தை சீரமைப்பு பணிகளையும் தொடக்கி வைத்தார். கொளத்தூர் தொகுதியில் உள்ள தாந்தோணியம்மன் கோயில் குளம், சன்னதி தெருவில் உள்ள சிவன் கோயில் குளம் தூர்வாரும் பணியிலும் திமுகவினர் ஈடுபட்டனர். நேற்று (21.5.17) காலை காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட வடிவுடையம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தேன். திருச்சியிலும் இது போல கோயில் குளத்தை தூர் வாரும் பணிகள் நடந்து வருகிறது. அதனையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.

திமுகவினர் கோயில் குளங்களை மட்டும் குறி வைத்து தூர்வார, ஜோதிடர்களின் அறிவுரையே காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. திமுக கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக கொண்டது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ’இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று தூற்றியவர்களை வைத்தே கோயில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறார் இறைவன்’ என்று சொல்லியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டுகளுக்கு முன்பு எழும்பூரில் நடந்த விழா ஒன்றில், ‘இந்துக்கள் என்றால் திருடர்கள்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர் இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்தனர். இந்நிலையில் தமிழிசையின் கமெண்ட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

×Close
×Close