சேலத்தில் உள்ள ஓமலூர் பச்சினம்பட்டியைச் சேர்ந்தவர் சக்தி (42). அரசு பஸ் நடத்துநர். இவரது மனைவி மங்கையர்கரசி (36). கோர்ட்டில் ஊழியர். இவர்களது ஒரே மகள் பாக்யஸ்ரீ (17). அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு முடித்துவிட்டு 2ம் ஆண்டு செல்ல இருந்தார். இந்நிலையில் 60 கிலோ உடல் எடை இருந்த அவர் எடையை குறைக்க விரும்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் சக்தியின் உறவினர் நவீன்பாலாஜி இயற்கை மருத்துவனை நடத்தி வருகிறார். அங்கு சேர்ந்த பாக்யஸ்ரீக்கு நவீன்பாலாஜி சிகிச்சை அளித்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் காலை திடீரென்று இறந்துவிட்டார். இச்சம்பவம் அறிந்த சக்தியின் உறவினர் மருத்துவமனை மற்றும் நவீன்பாலாஜியை தாக்கினர். இதற்கிடையில், தன்னுடைய ஒரே மகள் இறந்த செய்தி அறிந்த பாக்யஸ்ரீயின் பெற்றோர் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பாக்யஸ்ரீயின் உடலை ஒப்படைக்க கோவை மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சமாக ரூ.3000 கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாக்யஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிணவறையில் இருந்து சடலத்தை தூக்கி வந்து வேனில் ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.