என்ன காரணமாக இருந்தாலும் போயஸ் தோட்டத்தில் சோதனை நடப்பது வேதனையைத் தருகிறது என மைத்திரேயன் எம்.பி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு இன்று இரவு 9 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் வந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் உள்பட அதிமுக தொண்டர்கள் பலரும் போயஸ் கார்டனை நோக்கி படையெடுத்தனர். தூத்துக்குடியில் இருக்கும் டிடிவி தினகரன், ‘அம்மா வாழ்ந்த வீடு எங்களைப் பொறுத்தவரை கர்ப்ப கிரகம்’ என்று கருத்துத் தெரிவித்தார். அதோடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் முக்கிய தலைவராக விளங்கி வருபவரும், பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி ஆகியோருக்கு நெருக்கமான மைத்திரேயன் எம்பி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த ரெய்டு பற்றி கருத்து பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
’‘காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில்.’’ என்று பதிவிட்டுள்ளார்.
இபிஎஸ் - ஓபிஎஸ் அணியில் யாரும் இதுவரையில் கருத்துச் சொல்லாத நிலையில் மைத்திரேயன் கருத்து சொல்லியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.