ஓட்டையை அடைக்காமல் குடத்தில் தண்ணீர் பிடிப்பதா? ராமதாஸ் ஆதங்கம்

பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக பாடத்திட்டங்கள், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட மேலும் பல சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனாலும், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் சீரழிவுகள் வெறும் புண்ணாக மட்டும் இல்லாமல் புரையோடிப் போயிருப்பதால், அதை சரி செய்ய இன்னும் ஏராளமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ) விட தமிழகப் பாடத்திட்டம் மிகவும் தரமானதாகவும் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேநேரத்தில் கல்வி கோபுரத்தில் மேல்மட்டத்தில் அதிக விஷயங்களை சேர்க்கும் போது அவற்றின் சுமையை தாங்கும் வகையில் கல்வி கோபுரத்தின் அடித்தளம் வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் அடித்தளம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர்கள்: மாணவர்கள் விகிதம் 1:20 என்ற அளவுக்கு மேம்பட்டிருப்பதாக தமிழக அரசுக் கூறிக்கொள்கிறது. இது ஓரளவு உண்மையும் கூட. அதேநேரத்தில் இது வளர்ச்சியல்ல… வீக்கம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மாணவர்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் வளர்ச்சி ஆகும். மாறாக ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது எதிர்காலத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

20 மாணவர்களுக்கு ஒருவர் வீதம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும், அது சராசரியான அளவு தானே தவிர, சரியான அளவு இல்லை. 60 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், அதே நேரத்தில் 100 பேர் பயிலும் பள்ளியில் இருவர் மட்டுமே ஆசிரியர்களாக இருப்பதும் பள்ளிக் கல்வித் துறையின் அவலங்களில் சிலவாகும். தமிழகத்தில் உள்ள கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் 48% பள்ளிகள் இரு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் என்றும், தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளில் ஓர் ஆசிரியர் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் மீதமுள்ள இன்னொரு ஆசிரியர் மட்டுமே மாணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 5 வகுப்புகளுக்கான மாணவர்களை பெரும்பாலான நேரங்களில் ஓர் ஆசிரியர் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்?

தொடக்கக் கல்வியின் நிலை இவ்வாறு இருக்கும் சூழலில் இதை சரி செய்யாமல் மேல் நிலை வகுப்புகளில் சீர்திருத்தங்களை செய்வது குடத்தின் ஓட்டையை அடைக்காமல் தண்ணீர் பிடிக்கும் கதையாகவே அமையும். இந்த நிலையை மாற்ற உடனடியாக அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்தல், தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் உள்ள அதிகாரியை பள்ளிகளின் தர இயக்குனராக ( Director of School Standards) நியமித்தல், பள்ளிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வசதியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல் ஆகிய நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்தல், விளையாட்டு, நீதிபோதனை ஆகியவற்றுக்கு போதிய பாட வேளைகளை ஒதுக்குதல், வாக்காளர் பட்டியலை திருத்துவதில் தொடங்கி நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் பட்டியலை தயாரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close