மதுக்கொள்கையை தமிழக அரசு மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது : ஐகோர்ட் கருத்து

விதிகளுக்கு உட்பட்ட தூரத்திலேயே மதுக்கடைகள் அமைக்கப்படுவதாக அரசு தெரிவித்தாலும், இதில் மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மது விற்பனை தொடர்பான அரசின் கொள்கையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தங்கள் கல்லூரியில் இருந்து 65 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை இருப்பதாகவும், இதனால் ஆசியர்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் பலனில்லை என்றும் டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ’மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதனை முறையாக கடைபிடிக்க வேண்டும். வருமானம் ஈட்ட பல்வேறு வழிகள் இருக்கிறது. மக்கள் வாழ்க்கையை கெடுத்து வருமானம் ஈட்டுவதை ஏற்க முடியுமா?

விதிகளுக்கு உட்பட்ட தூரத்திலேயே மதுக்கடைகள் அமைக்கப்படுவதாக அரசு தெரிவித்தாலும், இதில் மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு குற்றங்களுக்கு காரணம் மதுதான் என்ற நிலையில் மது விற்பனை தொடர்பான அரசின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.’

மேலும் அவர் கூறுகையில், ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியரிடம் புகார் கொடுக்குமாறும் அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

×Close
×Close