தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் 7 முதல் 10 சதவீத கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை, கார் முதல் கனரக வாகனங்களுக்கான சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் ஆண்டிற்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 54 சுங்கச் சாவாடிகள் இரண்டு பிரிவாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 24 சுங்கச்சாவடிகளில் இந்த ஆண்டிற்கான கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் திண்டுக்கல், திருச்சி ,சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகள் இடம்பெற்றுள்ளன.
கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து, 90 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்படுகிறது. இருமுறை சென்றுவர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக அதிகரித்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும், 2 முறை சென்றுவர 220 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 4385 ரூபாயிலிருந்து 4800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290ல் இருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர ரூ.440ல் இருந்து ரூ.480 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.2770 இல் இருந்து ரூ.9,595 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து உயர்ந்து வரும் சுங்கச்சாவடி கட்டணத்தால், வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாடகை கார் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் நம்மிடம் தெரிவிக்கையில்; சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்பது எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியிருக்கின்றது. ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மறுபக்கம் சாலைகளில் வண்டியை எடுத்து ஓட்ட வந்தா இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வு என்பது பெரும் வேதனையளிக்கின்றது.
வாடகைக்கு வண்டிய எடுத்து ஓட்டினாத்தான் அதோட வலி எல்லாத்துக்கும் தெரியும். வாடிக்கையாளர்களும் அதப்புரிந்துக்கொள்வதில்லைங்க. வாடகையை கொஞ்சம் உயர்த்திக்கேட்டா என்னதுன்னு வாயடிக்கிறாங்க, நாங்க என்னத்தப் பண்றதுங்க. வாங்குற காசு டீசலுக்கும், பெட்ரோலுக்கும், சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் நுழைவு வரிக்கே அதிகம் செலவாகுதுங்க, அதனால சுங்கச்சாவடி கட்டணத்தை நாங்க வாடிக்கையாளர் பக்கமே திருப்பினதால, வெளியூர் செல்லக்கூடிய வாடிக்கையாளர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகின்றனர்.
சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக கட்டணங்களை வசூலிக்கும் நிர்வாகம், சாலைகளின் பராமரிப்பில் கோட்டிவிட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை நிலவரம். தேசிய நெடுஞ்சாலைகளில் எங்க பார்த்தாலும், பள்ள மேடுகள், திடீர் திடீர் என குறுக்கிடும் ஆடு மாடுகளால் விபத்து, வாகன ஓட்டிகளாலும் விபத்து இதையும் கடந்து காவல்துறையினரின் அபராத தொல்லை, ரொம்பவும் வேதனைதாங்க வண்டி ஓட்டுறது இப்பெல்லாம். எல்லாத்துக்கும் ஏமாளிங்க இந்த பொதுமக்கள் தானே என்பதாய் அரசு நிர்வாகமும் மெத்தனத்தில் இயங்குகின்றது பெருத்த சோதனையிலும் வேதனைங்க என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.