ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம் : ஸ்டாலினுக்கு பசுமை தாயகம் கண்டனம்

அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி "இலங்கையில் மனித உரிமை" எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது

By: June 12, 2017, 11:51:15 AM

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் – ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர் என பசுமை தாயகம் அமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பசுமை தயாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை” – ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

mk stalin - Dmk

“நடக்காத கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லையாம்!”

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் ‘தான் கலந்துகொள்ள இயலவில்லை’ என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் ‘காமெடி’ கடிதம் எழுதியுள்ளார்.

கூடவே மேலும் ஒரு கருத்தையும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்: “இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தனது ‘அண்டப்புளுகு’ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரலிலேயே இல்லாத கற்பனை கூட்டத்தால் எப்படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மு.க. ஸ்டாலினுக்கே வெளிச்சம்!

“உண்மையில் நடப்பது என்ன?”

ஈழத்தமிழர் சிக்கலோ இலங்கை விவகாரமோ இப்போதைய 35 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவே இல்லை. அடுத்து ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது. அதுவரை பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழச்சிக்கல் பேசப்பட வாய்ப்பு இல்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் NGO துணைக் கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு. இது போன்ற பலக்கூட்டங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தியுள்ளது. இவ்வாறான கூட்டங்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்புகளின் முழுக்கட்டுப்பாட்டில் அவர்களே நடத்தும் கூட்டங்கள் ஆகும். இக்கூட்டங்களுக்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.

அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி “இலங்கையில் மனித உரிமை” எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது . இக்கூட்டத்துக்கு இதே Tamil Uzhagam NGO அமைப்பினால் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

“மருத்துவர் அன்புமணியும் மு.க. ஸ்டாலினும்”

கடந்த மார்ச் மாதம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முன்பாக, பேரவையின் தலைவர் அழைப்பின் பேரில் இலங்கை மீதான நேரடி விவாதத்தில் பங்கேற்று பேசினார். இது போன்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் நேரடி விவாதத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மாறாக, ஒரு அரசு சாராத NGO அமைப்பின் பிரத்தியோக கூட்டத்திற்கு தான் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.

NGO அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்த Tamil Uzhagam NGO அமைப்புக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறுவதன் மூலம் – ஐநா அவைக் கூட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டத்தைப் பொன்று, ஒரு போலியான மோசடி தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே இப்படி போலியான கட்டுக்கதைகளை வெளியிடுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:The united nations human rights council and the eelam business pasumai thayagam condemns stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X