தேனி மாவட்டம், குரங்கணி மலைத் தீயில் சிக்கிய மாணவிகள் : மீட்புப் பணியில் விமானப் படை

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் கல்லூரி மாணவிகள் சிக்கினர். அவர்களை மீட்க விமானப் படைக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் கல்லூரி மாணவிகள் சிக்கினர். அவர்களை மீட்க விமானப் படைக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதி உள்ளது. இங்கு இன்று (மார்ச் 11) 25 கல்லூரி மாணவிகள் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட 25 மாணவிகளும் இதில் சிக்கினர்.

குரங்கணி மலை தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குரங்கணி தீ விபத்து தொடர்பான LIVE UPDATES

இரவு 10.45 : தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி கூறுகையில், ‘மொத்தம் 36 பேர் 2 குழுக்களாக மலை ஏற்றப் பயிற்சிக்கு போயிருக்கிறார்கள். அவர்களில் 25 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 15 பேர் வரை காயமடைந்திருப்பதாக தெரிகிறது. இன்று மாலை கீழே இறங்கி வரும்போது தீயில் சிக்கியிருக்கிறார்கள்.

ஹெலிகாப்டர் மூலமாக விமானப்படை வீரர்கள் ஒரு சர்வே செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். மீட்புப் பணிகளை தொடர்வார்கள்.’ என்றார்.

இரவு 10.40 : சம்பவ இடத்திற்கு கோவை மாவட்டம் சூலூரில் இருந்து விமானப் படை கமாண்டர்கள் சென்றிருப்பதாக நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

இரவு 10.35 : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இரவிலும் தேடுதல் பணிகள் நடத்தப்படும் என்றார்.

இரவு 10.30 : மருத்துவக் குழு மலையடிவாரம் சென்று சேர்ந்தது. இரவில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இரவு 10.15 : துணை முதல்வர் ஓபிஎஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி வருகிறார்.

இரவு 9.45 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘வனத்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும். குரங்கணி தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என கூறியிருக்கிறார்.

இரவு 9.15 : வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்றிருப்பதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடப்பதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். மர்ம நபர்களால் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், வரும் காலங்களில் இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.

இரவு 9.00 : முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘இன்னும் 10 பேர் மட்டுமே மீட்கப்பட வேண்டியிருப்பதாகவும், விடிந்தவுடன் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும்’ குறிப்பிட்டிருக்கிறார்.

இரவு 8.45 : மீட்கப்பட்ட மாணவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி சந்தித்து ஆறுதல் கூறினார். மீட்புப் பணிகளையும் துரிதப்படுத்தினார்.

Theni Forest Fire, Kurangani Fire

மீட்கப்பட்ட மாணவிகளுடன் தேனி ஆட்சியர் பல்லவி

இரவு 8.25 : தேனி காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்க 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றுள்ளன.

இரவு 8.10 : மீட்கப்பட்ட மாணவிகளுக்கு லேசான தீக் காயங்கள் இருந்தன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்களில் ஒருவர் பெயர் சக்திகலா, திருப்பூரை சேர்ந்தவர். அவரது செல்போன் எண்ணை பெற்று, குடும்பத்தினருக்கு வனத் துறையினர் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

இரவு 8.00 : முதல் கட்டமாக 7 மாணவிகள் மீட்கப்பட்டனர். 2-வது கட்டமாக 15 அல்லது 16 பேர் மலையில் இருந்து இறங்கி வருவதாகவும், மேலும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தீயில் சிக்கியிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இரவு 7.45 : கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் கிளம்பி வந்திருக்கின்றன. ஆனால் இரவில் வனப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதில் சிக்கல் இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இரவு 7.40 : குரங்கணி மலைத் தீயில் சிக்கிய மாணவிகள் ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்திருக்கிறது.

இரவு 7.35 : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ‘தேனி – போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.’ என கூறியிருக்கிறார்.

இரவு 7.30 : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ‘தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன். 10-15 மாணவர்கள் மலையின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்’ என கூறியிருக்கிறார்.

இரவு 7.15 : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் சுமார் 20-25 சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணியில் மாண்புமிகு தமிழக முதல்வர் வேண்டுகோளை ஏற்று இந்திய விமானப் படை தேனி மாவட்ட ஆட்சியர் உடன் தொடர்பு கொண்டுள்ளது. மாணவர்களை மீட்டுவர எல்லா முயற்சியும் எடுக்கப்படும்.’ என கூறியிருக்கிறார்.

இரவு 7.10 : 9 பேர் மலையில் இருந்து கீழே இறங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என போலீஸ் சூப்பிரெண்டு பாஸ்கரன் கூறினார். தேனி மாவட்டத்தில் இருந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்தார். போர்கால அடிப்படையில் மீட்பு பணி நடப்பதாக தகவல். இருட்டுவதால் நிலைமை சிக்கலாகாமல் இருக்க கையில் நெருப்பை அணைத்து பொது மக்களும் முன்னேறுகின்றனர் என தகவல்

இரவு 7.00 : மலையில் சிக்கிய மாணவிகளில் 7 பேரை மட்டும் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் வனக் காவலர்கள் மீட்டிருக்கிறார்கள்.

மாலை 6.45 : தேனியில் முகாமிட்டிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையீட்டில் மீட்புப் பணிக்கு விமானப்படை ஹெலிகாப்டர்களை அனுப்ப மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.

மாலை 6.40 : கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாலை 6.30 : குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

×Close
×Close