தங்களை தற்காத்துக் கொள்ள ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள் என தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பேசுகையில், “ஜெயலலிதா சமூக நீதிக்காக பாடுபட்ட நிலையில் அவர்களின் பெயரை கொண்டு கட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களை தற்காத்துக் கொள்ள பாரதிய ஜனதாவின் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்.
இதனை அதிமுக கட்சியினரும் தமிழக மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். பொதுப்பிரிவில் உள்ள சமூகங்களுக்கு அளிக்கப்பட்ட 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீடுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்திவருகின்றனர்.
முன்னதாக இந்த விவகாரத்தில் திமுக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பொதுப்பிரிவில் உள்ள சமூகங்களுக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பை அதிமுக வரவேற்கிறது” எனப் பேசியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil