/indian-express-tamil/media/media_files/2025/10/14/thirumavalavan-2025-10-14-13-28-32.jpg)
Thol Thirumavalavan
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, ”சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வரவேற்கிறோம். அதற்காக முதல்வருக்கு நன்றி கூறினோம். இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு.
கடந்த காலங்களில் சாதி அடிப்படையில் சில தலைவர்களின் பெயர்கள் புழக்கத்திற்கு வந்து நிலைபெற்று விட்டன. ஆனால், அதன் மூலம் அவர்கள் சாதி பார்த்தார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. உதாரணத்துக்கு, சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் சாதி ஒழிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இடதுசாரி சிந்தனையாளர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு ஆகியோரின் பெயரிலும் சாதிப் பெயர்கள் இருந்தன.
சாதி ஒழிப்பு அரசியல் வலுப்பெறுவதற்கு முன்பிருந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் சாதி அடையாளத்தோடு அழைக்கப்பட்டன என்பதனால், அந்த அடையாளங்களை இப்போதைக்கு அழித்து, புதிய தலைமுறையினருக்கு அவர்களை அடையாளப்படுத்த முடியாமல் விட்டுவிடக்கூடாது. அவர்கள் எந்த அடையாளத்தோடு அறியப்பட்டார்களோ, அந்த அடையாளத்தை இன்று கொண்டு வருவதனால் நாம் சாதியை வளர்க்கிறோம் என்று ஆகாது.
இனி நாம் அதைப் பயன்படுத்தக் கூடாது. பெரியார் அவர்கள் தொடக்கத்தில் 'நாயக்கர்' என்று அறியப்பட்டாலும், பிற்காலத்தில் அவரே அந்தப் பெயரை நீக்கிவிட்டு 'பெரியார்' என்று அறியப்பட்டு விட்டார். அதேபோல், திரு.வி.க அவர்களும் முதலில் 'முதலியார்' என்று அழைக்கப்பட்டாலும், பிற்காலத்தில் அவரே அந்தப் பெயரை நீக்கிவிட்டார். எனவே, இதை அரசியலாக்க வேண்டிய தேவையில்லை. அரசு "ஜி.டி. நாயுடு என்ற பெயரில்தான் அவரை அடையாளப்படுத்த முடியும்" என்று ஒரு முடிவை எடுத்திருப்பதனால், "அது சாதியை வளர்ப்பதற்கானதாக இருக்காது என்று நாம் நம்புவோம்" என்று திருமாவளன் தெரிவித்தார்.
முதல்வரிடம் வைத்த கோரிக்கைகள்
ஆசிரியர்கள் பணி நியமனம்: நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருவதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக் கிடைக்காமல் காத்திருக்கும் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வடசென்னை சுற்றுச்சூழல்: வடசென்னையில் குப்பைகளை எரியூட்டுவதால் காற்று மற்றும் குடிநீர் நஞ்சாக மாறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு ஒரு மாற்றுத் திட்டத்தைத் தயாரித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்ததார்.
சாலை வசதி: சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வி. கைக்காட்டி வரை 10 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டும், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க முதல்வரை வலிறுத்தி உள்ளோம், என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us