Advertisment

மகளிரியல் துறைகளை மூடும் முயற்சி... பாஜக அரசின் மகளிர் விரோதக் கொள்கையின் வெளிப்பாடு: திருமா

மகளிரியல் துறைகள் மூடப்படுவது வெறுமனே நிதிசார்ந்த பிரச்சனை அல்ல அது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மகளிர் விரோதக் கொள்கையின் வெளிப்பாடாகும்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu news today

Tamil nadu news today

கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை மூடிவிடுவதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை 2017 செப்டம்பர் மாதத்தோடு மூடிவிடுவதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பல்கலைகழக மானியக்குழு (யு.ஜி.சி) ஆணை ஒன்றை வெளியிட்டிருகிறது. மத்திய அரசின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மகளிரியல் துறைகளைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இந்தியாவெங்கும் கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் 163 மகளிரியல் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர், ஆய்வு மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பல்லாயிரக் கணக்கில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த மகளிரியல் துறைகள் நீண்ட காலமாக மகளிர் இயக்கங்களும் சமூக இயக்கங்களும் வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. இவையாவும் பல்கலைக்கழக மானியகுழுவின் (யுஜிசி) ஐந்தாண்டுத் திட்ட நிதிநல்கையின்கீழ் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டுவந்தன.

12வது ஐந்தாண்டு திட்டம் கடந்த 2017 மார்ச் மாதத்தில் முடிவுற்றபோது அதன் பின்னர் இந்தத் துறைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற அய்யம் எழுந்தது. அப்போது 2017 – 18 நிதி ஆண்டிலும் இந்தத் திட்டங்களுக்கான நிதி நல்கை தொடரும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்புச் செய்தது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னால் திடீரென 2017 செப்டம்பரோடு இந்தத் திட்டங்களுக்கான நிதி நிறுத்தப்படும் என அது அறிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள மகளிரியல் துறைகள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் 26 இடங்களில் மகளிரியல் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஏராளமான ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதுபோலவே முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களது எதிர்காலம் இப்போது கேள்விக் குறியாகியுள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் வேலையும் பறிபோகக் கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை நேரடியாக பல்கலைக்கழகங்களின் துறைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே இந்தியாவெங்கும் உள்ள மகளிரியல் துறைகள் பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்படும் வரை அவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை யுஜிசி நிறுத்தக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

மகளிரியல் துறைகள் மூடப்படுவது வெறுமனே நிதிசார்ந்த பிரச்சனை அல்ல அது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மகளிர் விரோதக் கொள்கையின் வெளிப்பாடாகும். இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Viduthalai Chiruthaigal Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment