இனி பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது. இது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தையும், பெருவாரியான கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. 10,11,12 என வரிசையாக மூன்று பொதுத் தேர்வினை எப்படி எழுத முடியும்? என மாணவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக் கல்வித்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அந்த சீர்திருத்தங்களின் ஒரு அங்கமாக ப்ளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் சுமையை அதிகரிப்பதாக உள்ளது. எனவே பொதுத்தேர்வுக்குப் பதிலாக இரு பருவத் தேர்வுமுறையை ( செமஸ்டர் ) நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள், ப்ளஸ் 1 வகுப்புப் பாடங்களை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளிலும் ப்ளஸ் 2 பாடங்களையே நடத்திவந்தன. அதனால் உயர்கல்வி வகுப்புகளில் சேரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவேதான் ப்ளஸ் 1 வகுப்பிலும் பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை சிலரால் முன்வைக்கப்பட்டது. அதில் நியாயம் இருந்தாலும், அது மாணவர்களின் தேர்வுச் சுமையை அதிகரித்து மன அழுத்தத்துக்கு அவர்களை ஆளாக்கிவிடும் என்பதால், கல்லூரி வகுப்பில் இருப்பதுபோல இருபருவத் தேர்வுமுறையை (செமஸ்டர்) ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அறிமுகப்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடை நிறுத்தத்துக்கு முதன்மையான காரணம் நமது தேர்வுமுறைதான். தரம், தகுதி என்ற தவறான கருத்தாக்கங்களின் அடிப்படையில் நமது தேர்வுமுறை அமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் இப்போதைய தேர்வுமுறை, மாணவர்களின் சிந்திக்கும் திறனையே பாழாக்கிவிடுகிறது. இந்த முறையில் கல்விப் பயிலும் மாணவர்கள், வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாதவர்களாக, எல்லாவற்றுக்கும் ஆயத்தமான முன்பே தயாரிக்கப்பட்ட தீர்வுகளைத் தேடுகிறவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்த சார்பு மனோநிலை மாணவர்களைத் தற்சார்பு அற்றவர்களாக்கிவிடுகிறது.
இந்தத் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவந்து பள்ளியில் சேர்கிற அனைவருமே பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயர்கல்வியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கேற்ப நமது உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.