/indian-express-tamil/media/media_files/2025/02/02/77YL3bnDIiEXcK6EwGyW.jpg)
பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்” என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
“பெரியார் பற்றி கொச்சையாக பேசக் கூடியவர்கள் முளைத்து இருக்கிறார்கள்; பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்” என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நம்மை எல்லாம் மனிதர்களாய் தலைநிமிர வைத்த தலைவர்கள் அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்ஸ். நாம் எப்போதும் கொள்கைகளை முதன்மையாக கொண்டுள்ள இயக்கம். தேர்தல் என்பது நமக்கு இடையில் வந்து போகிற நிகழ்வு மட்டுமே. எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற பதவிகள் நம் பயணத்தில் ஒரு இளைப்பாறல் தான்.
இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்ய கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்க கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அவரை வீழ்த்த வேண்டும் என்று யார் முயற்சித்தார்கள் என்பதை நாடு அறியும், நாமும் அறிவோம். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போய் வீழ்ந்தார்களே தவிர, பெரியாரை வீழ்த்த முடியவில்லை.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. வி.சி.க.வுக்கும் அவர்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. பெரியாரை அந்நியர் என்று சொல்பவர்கள், அம்பேத்கரை சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். பெரியாரை தமிழர் அல்ல, தமிழ் தேசியத்தின் பகைவர் என்று உளறி கொண்டிருக்கிறார்கள். இதனை நாம் அனுமதித்தால், அம்பேத்கரை மராட்டியர் என்று சொல்லி அந்நியப்படுத்துவார்கள். அவருக்கும் தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பார்கள்” என்று திருமாவளவன் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை விமர்சனம் செய்துவருகிறார். நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். சீமானின் பெரியார் குறித்த விமர்சனங்களுக்கு பா.ஜ.க தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெரியார் பற்றி விமர்சித்து வரும் சீமான் குறித்த விமர்சனங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள், பெரியாரிய இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.