Advertisment

திருமுருகன் காந்தி கைதாகி விடுதலை

வைகோ ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
thirumurugan gandhi again arrested, may 17 movement co-ordinator thirumurugan gandhi, patchai thamizhagam condemns, may 17 movement

வைகோ ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கடந்த மே 20-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். போலீஸ் தடையை மீறி அந்த நிகழ்ச்சியை நடத்தவும் செய்தார். அப்போது அவரையும், தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரையும் போலீஸ் கைது செய்தது. பிறகு அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அண்மையில் குண்டர் சட்டத்தில் இருந்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஐ.நா.வில் வைகோ-வை தாக்க முயன்ற சிங்கள வெறியர்களை கண்டித்து இன்று (29-ம் தேதி) சென்னையில் தமிழ்ப் புலிகள் அமைப்பு சார்பில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து திருமுருகன் காந்தியும் அங்கு சென்றார்.

போராட்டம் நடந்த இடம் அருகே டீ கடையில் அவர் நின்றிருந்தபோது, அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் இழுத்துச் சென்றதாக தெரிகிறது. அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது மேலும் ஏதாவது வழக்குகளைப் போட்டு சிறையில் அடைக்க போலீஸ் முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

இது குறித்து அணு உலை எதிர்ப்பு போராளி சுப.உதயகுமாரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு செயல்படும் பச்சைத் தமிழகம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அருள்தாள் ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஐ.நாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வை மிரட்டிய சிங்கள அரசை கண்டித்து இன்று (29-ம் தேதி) தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அதற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்று தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவிண் குமார் இரண்டு பேரையும் தீடீரென்று வந்த காவல்துறை வாகனம் எந்த அறிவிப்புமின்றி தரதரவென தோழர்களை இழுத்து சென்றிருக்கிறது.

போராளிகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறை எந்தவித சட்ட ஆணையுமின்றி கடத்தி செல்வது போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முழுவதுமாக நீக்கி விடும். ஏற்கனவே சூழலியல் போராளி முகிலனை காவல்துறை இது போன்று காரில் கடத்திச் சென்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை மீறி காவல்துறை தன் விருப்பம் போல் செயல்படுவதை பச்சைத் தமிழகம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வாய்மையே வெல்லும் என்ற தாரக மந்திரத்தை காற்றில் பறக்கவிட்டு விருப்பம் போல் செயல்படும் போக்கை நிறுத்திக் கொள்ள காவல்துறையை பச்சைத் தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு கூறியிருக்கிறார்.

இதற்கிடையே போராட்டத்தில் கைதான அனைவரையும் மாலையில் விடுதலை செய்த போது, திருமுருகன் காந்தியையும் போலீஸ் விடுவிக்கப்பட்டார்.

 

Vaiko Thirumurugan Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment