திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததால், புழல் சிறையில் இருந்து 4 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
திருமுருகன் காந்தி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இயங்கி வருகிறார். முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ்ந்த தினத்தின் பெயரிலேயே இயக்கம் நடத்தும் அவர், ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளையொட்டிய ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினாவில் அஞ்சலி கூட்டம் நடத்துவது வழக்கம்!
அதேபோல கடந்த மே 21-ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி மெரினாவில் அஞ்சலி செலுத்த போலீஸாரிடம் அனுமதி கோரினர். ஆனால் போலீஸார், ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம் பெரும் பிரச்னை ஆனதால், அதன்பிறகு மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி இல்லை. வேறு எங்காவது நடத்துங்கள்’ என கூறினர். ஆனால் மே 17 இயக்கத்தினர், அதே மெரினாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் நடக்கும் அஞ்சலி நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டி, ‘இதுவும் அதே மாதிரியான அஞ்சலி நிகழ்ச்சிதான்’ என வாதிட்டனர்.
போலீஸ் அனுமதி கொடுக்க மறுத்ததால், தடையை மீறி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர். அதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகளான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பிறகு இவர்கள் நால்வர் மீதும் வேறு சில போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை இணைத்து குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இவர்களை விடுவிக்க வலியுறுத்து தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. சில அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால் இவர்களை விடுவிக்க அரசு தயாராகவில்லை. எனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 19-ம் தேதி (நேற்று) இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சென்னை புழல் சிறைக்கு அந்த உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (20-ம் தேதி) திருமுருகன் காந்தி உள்பட நால்வரையும் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பமாகின. கைதாகி 4 மாதங்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை வரவேற்க மே 17 இயக்கத்தின் வேண்டுகோள் அடிப்படையில் இன்று பகல் 12 மணியளவில் இருந்தே சென்னை புழல் சிறை முன்பு தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர். மாலை 3 மணிக்கு திருமுருகன் காந்தி உள்பட 4 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்தும், தோள்களில் தூக்கி வைத்தும் தமிழ் உணர்வாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, ‘இது இந்திய தேசிய அரசுக்கும், தமிழ் தேசிய அரசுக்கும் இடையிலான போர். இந்திய தேசியம் தமிழகத்தை அடிமையாக்க நினைக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இந்த நடவடிக்கைகள். இந்தப் போரில் நிச்சயம் தமிழ் தேசியம் வெல்லும்.
புழல் சிறையிலோ, டெல்லி திகார் ஜெயிலிலோ 4 ஆண்டுகள் அல்ல, 40 ஆண்டுகள் எங்களை சிறையில் போட்டாலும் எங்கள் உரிமை முழக்கத்தை அடக்க முடியாது. தமிழக இளைஞர்களே, பொழுதுபோக்கு அம்சங்களில் இருந்து மீண்டு உரிமைக்காக களம் காண வாருங்கள். தமிழகம் முழுவதும் நாங்கள் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களின் உரிமை மீட்புப் போராட்டத்திற்கு தயாராவோம்’ என்றார் திருமுருகன் காந்தி.