நிர்மலா சீதாராமனை அல்ல, சிவபெருமானையே முதல்வர் வேட்பாளாராக அறிவித்தாலும் கூட பாஜக-வினால் வெற்றிபெற முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமீபத்தில் தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சராக இருந்துவரும் நிர்மலா சீத்தாராமன், சுகாதார துறை சுகாதாராத்துறை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. மத்திய வர்த்தக அமைச்சர் நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டதற்கு ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு தமிழக பாஜக தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டன.
பாஜக தமிழகத்தில் பலவீனமாக உள்ளது என்றும், அதனை நிர்மலா சீத்தாராமனைக் கொண்டு சரிக்கட்டும் பணியில் கட்சியின் மேலிடம் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நிர்மலா சீதாராமன் மூலமாக அடுத்த நகர்வை பாஜக மேலிடம் செய்துவருவதாக கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 22-ந் தேதி தமிழம் வர இருக்கிறார். தற்போதைய நிலையில், தமிழக பாஜகவில், நிர்மலா சீதாராமனுக்கு எந்தவித பொறுப்பும் அளிக்கப்படவில்லை. எனவே, அமித் ஷா வருகையின் போது, நிர்மலா சீத்தாராமனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், தமிழகப பாஜக-வில் நிர்மலா சீதாராமனை முன்னிறுத்தும் வகையில் எந்தவித தகவலும் இல்லை என்று தமிழக பாஜக தலைர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். இதனிடையே, அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது: டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலங்ளாக அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் செயல்படாமல் இருந்து வரும் ஆட்சி இருப்பதும் ஒன்று தான், விலகுவதும் ஒன்றுதான். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனின் கேள்வி சரியானது தான் என்றார்.
மேலும், தமிழகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அல்ல, சிவபெருமானையே முதல்வர் வேட்பாளாராக அறிவித்தாலும் கூட பாஜக-வினால் வெற்றிபெற முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறினார்.